நாள், நட்சத்திரங்களைப் பார்த்து பதவி ஏற்றாரா ஸ்டாலின்? - பா.ஜ.க தலைவர் சுவாரஸ்ய தகவல்!
By : Shiva
சட்டப்பேரவை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ததில் இருந்து முதலாவது சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டுவது வரை அனைத்திற்கும் திமுக அரசு நாள் நட்சத்திரம் பார்த்து செய்துள்ளது என்று சட்டசபையில் பாரதிய ஜனதா கட்சி சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது, "முதல்வர் முக.ஸ்டாலின் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மிதுன லக்னம் இருந்தபோது வேட்பு மனு தாக்கல் செய்தார். அதே போல் மே 7ஆம் தேதி காலை 9 முதல் 10 மணிக்குள் மிதுன லக்னத்தில் சூரியன் உச்சம் பெற்ற நேரத்தில்தான் அவர் முதல்வராக பதவி ஏற்றார். அதேபோன்று அமாவாசை தினத்தன்று தான் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கியது" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இந்து கடவுள்கள் மீதும் இந்துக்களின் சம்பிரதாயங்களின் மீதும் கடுமையான விமர்சனங்களை வைத்து வந்த மு.க.ஸ்டாலின் தற்போது அனைத்து விஷயத்திற்கும் நாள், நட்சத்திரம் போன்ற அனைத்து சம்பிரதாயங்களையும் பார்த்து வருவதாக பல்வேறு செய்திகள் வெளியாகின. அதனை நிரூபிக்கும் விதமாக தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகள் இருப்பதாகவும் கூடிய விரைவில் இந்து கடவுள்கள் மற்றும் சம்பிரதாயத்தின் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டு விடும் போல இருக்கிறதே என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.