'ஜெய்ஹிந்த்' சொல்லுக்கு சொந்தக்காரர் ஒரு தமிழன் - சுவாரசிய தகவல்!
By : Shiva
இந்திய விடுதலை போராட்டத்தின் போது 'ஜெய்ஹிந்த்' என்ற முழக்கத்தை முதலில் முழங்கியவர் ஒரு தமிழர் என்றும் இதை கேட்ட நேதாஜி இந்த முழக்கத்தை உலகம் முழுவதும் பரப்பினார் என்பதும் அதே வீரத்தமிழன் ஹிட்லரையே எழுத்து வடிவம் மூலம் மன்னிப்பு கேட்க வைத்தார் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்தப் பெருமைகளுக்கு எல்லாம் சொந்தக்காரர் ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை முதலில் முழங்கிய தமிழகத்தைச் சேர்ந்த செண்பகராமன் பிள்ளை.
ஆங்கிலேயரிடம் அடிமைபட்டு கிடந்த இந்திய மக்களிடம் நாட்டுப்பற்றை விதைக்கவும், விடுதலை வேட்கையை வளர்க்கவும் இந்திய விடுதலை போராட்ட வீரர்களால் முழங்கப்பட்ட முழக்கம் 'ஜெய்ஹிந்த்'. வெல்க இந்தியா, இந்தியா நீடூடி வாழ்க , இந்தியாவிற்கு வெற்றி என்பதன் சுருக்கமே ஜெய்ஹிந்த். இந்தியா விடுதலை பெற்ற நாளான ஆகஸ்ட் 15, 1947 ஆம் நாள் அனைத்து அஞ்சல்களிலும் ஜெய்ஹிந்த் என்ற வெற்றி முழக்கச் சொல் முத்திரையாகப் பதிக்கப்பட்டது.
அனைத்து வானொலி நிலையங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் ஜெய்ஹிந்த் என்று சொல்லி முடிப்பர். 1947இல் நடந்த இங்கிலாந்து அரசி எலிசபத் – பிலிப் திருமணத்திற்கு மகாத்மா காந்தி தன் கையால் 'ஜெய்ஹிந்த்' என்ற வெற்றி முழக்கச் சொல்லை இழைத்த சால்வையை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார். அன்று தொடங்கி இன்று வரை ஜெய்ஹிந்த் மற்றும் வந்தே மாதரம் என்று முழங்கி இந்தியர்கள் தங்களின் தேச பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை முதலில் முழங்கியவர் செண்பகராமன் என்ற தமிழர் தான்.
செண்பகராமன் 1891 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் திருவனந்தபுரத்தில் உள்ள புத்தன் சந்தை என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் சின்னசாமிப்பிள்ளை, தாயார் பெயர் நாகம்மாள். இவர் இளம் வயதிலேயே விளையாட்டிலும் சிலம்பம், வாள்வீச்சு போன்ற கலைகளிலும் சிறந்து விளங்கினார். திருவனந்தபுரம் மன்னர் உயர் நிலைப் பள்ளியில் தம் பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். பின் ஐரோப்பா சென்ற செண்பகராமன் முதலில் இத்தாலியிலும் பின்னர் சுவிட்சர்லாந்து பல்கலைக் கழகத்திலும் பயின்று பல பட்டங்கள் பெற்றார்.
இவர் மன்னர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் போது இந்தியாவில் விடுதலைக் கனல் எரியத் தொடங்கிய காலம். அப்போது தன்னுடன் படிக்கும் மாணவர்களை ஒன்று சேர்த்துக் கொண்டு "ஸ்ரீ பாரத மாதா வாலிபர் சங்கம் " ஏற்படுத்தி 'வந்தே மாதரம்' என உரிமை முழக்கம் இட்டார். அதன் பின்னர் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு 'ஜெய் ஹிந்த்' என்ற முழக்கத்தை எழுப்பினார்.
பின்னர் சுவிசர்லாந்து சென்று படிக்கும்போது இந்தியாவில் ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட அடக்குமுறையை பற்றி பல சொற்பொழிவுகளை மேற்கொண்டார். பின்னர் டாக்டர் பட்டம் பெற்ற பிறகு ஐரோப்பாவில் இருந்து கொண்டே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் மியான்மர் போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக மக்களிடையே விழிப்புணர்வு மேற்கொண்டு இந்திய மக்களுக்கு உலக நாடுகளின் ஆதரவை திரட்டினார்.
1933-ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றிலும் அவர் 'ஜெய் ஹிந்த்' கோஷத்தை முழங்கினார். இதைக் கேட்ட நேதாஜி இம்முழக்கத்தை வழிமொழிந்து உலகெங்கும் பரப்பினார். அப்படிப்பட்ட 'ஜெய் ஹிந்த்' முழக்கத்தை நீக்கியதைத் தான் இன்று பெருமையாக நினைக்கின்றனர் சிலர். தண்ணீர் விட்டா வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்! .. (சுதந்திரப் பயிர்) என்ற பாரதியின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.