'பிரகாஷ்ராஜ் ஒரு கன்னடர்' - தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் வெடிக்கும் சர்ச்சை!

By : Mohan Raj
தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பிரகாஷ்ராஜ் கன்னடர் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர் எதிரணியினர்.
தெலுங்கு நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து வரும் நரேஷின் பதவிக்காலம் முடிவடைவதால் விரைவில் அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து நடிகர் பிரகாஷ்ராஜ், மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு, நடிகை ஜீவிதா ஆகிய மூன்று பேரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.
இந்த நேரத்தில் பிரகாஷ்ராஜை கன்னடர் என்றொரு விசயத்தை முன்வைத்து எதிரணியினர் பிரச்சாரம் செய்ய துவங்கியுள்ளனர்.
இந்த நிலையில் பிரகாஷ்ராஜ்க்கு ஆதரவாக தெலுங்கு நடிகரும், தயாரிப்பாளருமான பாண்ட்லா பிரகாஷ் என்பவர் குரல் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், "பிரகாஷ்ராஜ் தெலுங்கர் அல்ல, கன்னடர் தான். ஆனால், ஐதராபாத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தை தத்தெடுத்துள்ளார். அந்த மக்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து வளர்ச்சிப் பணிகளை ஆற்றி வருகிறார். அந்த அளவுக்கு தெலுங்கு மக்களுக்காக அவர் சேவை செய்கிறார். அப்படிப்பட்ட அவரை வெளி மாநிலத்தவர் என்று பிரித்துப்பேசுவது தவறு" என்று பிரகாஷ்ராஜ்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
