தொடர்ந்து 'கிரே' பட்டியலில் நீடிக்கும் பாகிஸ்தான் - சர்வதேச நிதி உதவி கிடைப்பதில் சிக்கல்!
By : Shiva
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளை ஊக்குவிப்பது, பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிப்பதை தடுக்காமல் இருப்பது போன்ற காரணங்களுக்காக பாகிஸ்தான் தொடர்ந்து 'கிரே' பட்டியலில் நீடிப்பதாக எப்.ஏ.டி.எப் (Financial Action Task Force) அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக் குழு செயல்பட்டு வருகிறது. ஜி7 நாடுகள் இணைந்து உருவாக்கிய இந்த குழு உலக அளவில் நடக்கும் சட்ட விரோத பண பரிமாற்றம் மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளிப்பதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த குழு 2018-ஆம் ஆண்டு பாகிஸ்தானை 'கிரே' பட்டியலில் சேர்த்தது. தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி அளிப்பது, பயங்கரவாத செயல்களை செய்வதற்காக பயங்கரவாத அமைப்புகளை ஊக்குவிப்பது போன்ற காரணங்களுக்காக இக்குழு பாகிஸ்தானை 'கிரே' பட்டியலில் சேர்த்தது.
இந்த கிரே பட்டியலில் இருக்கும் நாடுகள் சர்வதேச நிதி உதவியை பெற முடியாமல் போகும் நிலை ஏற்படும். எனவே 2018ஆம் ஆண்டு முதல் இக்குழு நிர்ணயித்த 27 திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பாகிஸ்தான் முயற்சி செய்வதாக தெரிவித்து வருகிறது. குழு நிர்ணயித்த 27 செயல் திட்டங்களில் 26 செயல் திட்டங்களை நிறைவேற்றி விட்டதாகவும் ஆகவே விரைவில் கிரே பட்டியலில் இருந்து பாகிஸ்தான் விரைவில் நீக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது.
ஆனால் 27 செயல்திட்டங்களில் மூன்று திட்டங்களை இன்னும் முழுமையாக செய்து முடிக்காமல் உள்ளதால் பாகிஸ்தான் தொடர்ந்து கிரே பட்டியலில் நீடிப்பதாக எப்.ஏ.டி.எப்., தலைவர் மார்கஸ் பிளைர் தெரிவித்துள்ளார். முன்னதாக பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு ஓய்வு ஊதியம் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி வருவதாக ஐநா சபையில் இந்தியா சார்பாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.