திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த மூன்று நபர்கள் புழல் சிறையில் அடைப்பு - தோண்ட தோண்ட கிடைக்கும் மர்மம்!
By : Parthasarathy
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த மூன்று நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்த நபர்களின் மீது ஏழு பிரிவுகளில் கீழ் வழக்கு பதிந்து, அவர்களிடம் இருந்த "ஆதார் அட்டை", வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூரில் கைதான வங்க தேசத்தினரை, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை எப்படி பெற்றனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த ஷிமுல் காஜி, சைபுல் இஸ்லாம், மன்னமோலல், ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் அந்த மூவரையும் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மூன்று நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, முடிவு வெளிவரும் வரை சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் புழல் சிறையில் அடைக்க அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்ட மூன்று பேருடன், யார் யார் தொடர்பில் இருந்தனர், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை எப்படி பெற்றனர் என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து காவல் துறை கூறும்போது "கடந்த ஐந்து ஆண்டுகளாக ஷிமுல் காஜி என்பவர் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் தங்கி வேலை செய்து வந்தார். மேற்கு வங்கத்தில் பெறப்பட்ட அடையாள அட்டையால், ஈரோட்டில் ‛ஆதார்' கார்டு பெற்றார். மற்ற இருவரும், இரண்டு ஆண்டுகளாக பொங்குபாளையம், ஊத்துக்குளியில் தங்கியிருந்தது தெரியவந்தது. இரண்டு மாதம் முன், ஷிமுல் காஜி திருப்பூருக்கு வந்தார்.இவரிடம் திருப்பூர், ஈரோடு, கோவை பகுதியில் சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் தொடர்பில் இருந்தனர். திருப்பூரில் வேலை செய்யும் வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள், தங்கள் சம்பளத்தை,வீட்டுக்கு ஷிமுல் காஜி மூலமாக அனுப்பி வந்தனர். இதற்கு ஒரு தொகையை கமிஷனாக பெற்று வந்தார். கைதான மூன்று பேரின், விபரங்களை மத்திய உளவு பிரிவினர் பெற்று விசாரித்து வருகின்றனர்." என்று தெரிவித்தனர்.