இளைஞர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது அயோத்தியை நேரில் காண வேண்டும் - பிரதமர் மோடி!
By : Shiva
ஆன்மீக மையம், சர்வதேச சுற்றுலா முனையம் மற்றும் நிலையான சீர்மிகு நகரமாக அயோத்தியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அயோத்தியின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அயோத்தியின் வளர்ச்சி பற்றிய பல்வேறு அம்சங்கள் நிறைந்த விளக்க அறிக்கையை உத்தரப்பிரதேச அரசு அதிகாரிகள் பிரதமரிடம் முன்வைத்தனர்.
அப்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட வருவதால் அங்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் மோடியிடம் தெரிவிக்கப்பட்டது. விமான நிலையம், ரயில், பேருந்து நிலையங்கள், சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் விரிவாக்கம் உள்ளிட்ட ஏராளமான உள்கட்டமைப்பு திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.
பக்தர்கள் தங்குவதற்கான வசதிகள், ஆசிரமங்கள், மடங்கள், உணவகங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான மையம், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகமும் அயோத்தியில் உருவாக்கப்பட உள்ளது. சரயு நதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. சரயு நதியில் கப்பல் போக்குவரத்தும் அன்றாடம் மேற்கொள்ளப்பட உள்ளது.
மிதி வண்டி ஓட்டுபவர்கள் மற்றும் பாதசாரிகளுக்கு போதிய இடைவெளியை உறுதி செய்யும் வகையில் நிலைத்தன்மையுடன் அயோத்தி நகரம் மேம்படுத்தப்படும். சீர்மிகு நகர உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி நவீன முறையில் போக்குவரத்து மேலாண்மைப் பணிகள் நடைபெறும்.
தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது அயோத்தியை நேரில் காண இளம் தலைமுறையினர் விரும்ப வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார். எதிர்வரும் காலத்தில் அயோத்தியில் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார். அதேவேளையில் வளர்ச்சியின் அடுத்த நிலைக்கு அயோத்தியை முன்னெடுத்துச் செல்லும் உத்வேகம் தற்போது தொடங்க வேண்டும். புதுமையான வழிகளில் அயோத்தியாவின் அடையாளம் மற்றும் அதன் கலாச்சார செழுமையைக் கொண்டாடுவதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
அயோத்தியின் வளர்ச்சிப் பணிகள், மக்கள் பங்களிப்புடன், குறிப்பாக இளைஞர்களால் வழி நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த நகரின் வளர்ச்சிப் பணியில் நமது திறமைவாய்ந்த இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்துமாறும் அவர் வலியுறுத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.