'ஜெய்ஹிந்த் என்று சொல்வதில் பெருமை' - தி.மு.க-வை தாக்கும் காங்கிரஸ்?
By : Shiva
தமிழக சட்டமன்ற கவர்னர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை நீக்கப்பட்டதால் தமிழகம் தலை நிமிர தொடங்கிவிட்டது என்று எம்எல்ஏ ஈஸ்வரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது "ஜெய்ஹிந்த் என சொல்வதில் பெருமை" என்று தமிழக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்ற பிறகு சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்கியது. பின்னர் கவர்னர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலர் ஈஸ்வரன், ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளதன் காரணமாக தமிழ்நாடு தலைநிமிர தொடங்கிவிட்டது என்று பேசினார்.
இதனால் வேண்டுமென்றே கவர்னர் உரையில் இருந்து ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதை தொடர்ந்து தற்போது தி.மு.க அங்கம் வகிக்கும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக "ஜெய்ஹிந்த் என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம்" என்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.
அதில் இந்திரா காந்தி ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது ஜெய்ஹிந்த் என்று கோஷம் இடுவதை போன்ற ஒரு வீடியோ பதிவையும் பதிவிட்டு அதன் கீழே ‛ஜெய்ஹிந்த் என சொல்வதில் பெருமை' (ProudToSayJaihind) என்னும் ஹேஸ்டேக்குடன் பதிவு செய்துள்ளது.
சட்டசபையில் திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏ பேசியது தவறு என்று சுட்டிக்காட்டும் விதமாக இந்த பதிவு அமைந்துள்ளது. ஏற்கனவே அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக மத்திய அரசை ஒன்றிய அரசு என்று பேசி வரும் தி.மு.க-வினர் தற்போது சுதந்திர போராட்டத்தின் போது அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களாலும் உச்சரிக்கப்பட்ட ஜெய்ஹிந்த் வார்த்தையை வேண்டுமென்றே நீக்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.