கண்ணகி கோவில் சீரமைப்பு பணியை கிடப்பில் போட்ட கேரளா அரசு!
By : Shiva
தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சீரமைப்பு பணிகள் 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் கோவிலை உடனடியாக புனரமைக்குமாறு மங்கலதேவி கண்ணகி கோவில் அறக்கட்டளையினர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தமிழக- கேரள எல்லை லோயர்கேம்ப் பளியன்குடி விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க கோவிலாக இருந்து வருகிறது. இரு மாநிலங்களும் இந்தக் கோவிலுக்கு சொந்தம் கொண்டாடி வருவதால் கோவில் பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் தற்போது முழுவதும் அழியும் தருவாயில் இருக்கிறது.
இந்த கோவிலை கேரள வனத் துறையும், கேரள தொல்பொருள் ஆய்வுத்துறையினரும் சீரமைக்க வேண்டும் என்று கடந்த 2016 ஏப்ரல் 5-ல், கேரளா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை செயல்படுத்த யாரும் முன்வராததால் அறக்கட்டளை சார்பாக மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோவிலை சீரமைப்பதற்காக 39 லட்சம் திட்ட மதிப்பீடு செய்து டெண்டர் விடப்போவதாக நீதிமன்றத்தில் கேரள தொல்பொருள் துறை தெரிவித்தது. ஆனால் அவர்களும் பெயரளவில் கோவில் பராமரிப்பு பணிகளை செய்து விட்டு பின்னர் புனரமைப்பு பணிகளை கிடப்பில் போட்டுள்ளனர். இதிலிருந்து அறக்கட்டளை சார்பாக மீண்டும் வழக்கு தொடரப்பட உள்ளது.
2020, 2021 ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா தடைபட்டது. அந்த நேரத்தில் பராமரிப்பு பணிகளும் நடைபெறாததால் கோவில் முற்றிலும் சேதமடைந்து அழியும் தருவாயில் இருக்கிறது. டெண்டர் விடப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் கோவிலை கேரள தொல்பொருள் ஆய்வுத்துறை சீரமைக்க முன்வராததால் உயர்நீதிமன்றத்தில் அறக்கட்டளை சார்பில் வழக்குத் தொடர உள்ளதாக அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Source : Dinamalar