கழிவறை சுத்தம் செய்தால்தான் சம்பளம் - அர்ச்சகரை மிரட்டிய அதிகாரி!
By : Shiva
இந்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கர்நாடகா பங்காரு திருப்பதி கோவிலில் உள்ள கழிவறையை அர்ச்சகரை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கவயல் தாலுகா அர்ச்சகர்கள் சங்க தலைவர் மஞ்சுநாத் தீக் ஷித் புகார் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் தங்கவயல் தாலுகாவுக்கு உட்பட்ட குட்டஹள்ளியில் பங்காரு திருப்பதி எனும் பிரசன்ன வெங்கட ரமண சுவாமி கோவில் உள்ளது. கர்நாடக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இணையான கோவிலாக இருந்து வருகிறது. திருப்பதிக்கு சென்று வரமுடியாத பக்தர்கள் இக்கோவிலுக்கு சென்று பூஜைகள் செய்து வருகிறார்கள். இந்த கோவிலில் வெங்கட ரமண சுவாமி சன்னதி, லட்சுமி சன்னதி மற்றும் தெப்பகுளம் உள்ளன. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோவிலுக்கு சொந்தமாக கோவில் அருகே திருமண மண்டபம், தங்கும் விடுதி உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் செயல் அதிகாரியாக சுப்பிரமணியன் என்பவர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். இந்த கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர் லக்ஷ்மி நாராயணன் என்பவரை சுப்ரமணியன் கழிவறையை சுத்தம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். அவ்வாறு கழிவறையை சுத்தம் செய்தால் மட்டும் தான் கோவிலில் இனி வேலை செய்ய முடியும் என்று மிரட்டியுள்ளார். அப்படி கழிவறையை சுத்தம் செய்யாவிட்டால் வேலையும் கிடையாது சம்பளமும் கிடையாது என்று அச்சுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து அந்த கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் அனைவரும் துன்புறுத்தப்பட்டு வருவதாக தாலுகா வர்த்தகர்கள் சங்கம் புகைப்பட ஆதாரத்துடன் கர்நாடக அரசுக்கு புகார் ஒன்றை அளித்துள்ளது. ஆகவே இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் வலியுறுத்தி உள்ளதாக அர்ச்சகர்கள் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dinamalar