மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு - அடிப்படை வசதிகள் செய்யப்படுமா?
By : Shiva
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளதால் அங்கு பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலமாக மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கேரள மாநில பெண்கள் 41 நாட்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்த கோவிலுக்கு வருவதால், பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது.
கடந்த மாதம் 2ஆம் தேதி இந்த கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமாகியது. இந்த தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் வலியுறுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து கோவிலில் பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தற்போது கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாத நிலையில், கோவில் அர்ச்சகர்கள் வழக்கம்போல் பூஜையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பேருந்துகள் ஓட தொடங்கியதால் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மண்டைக்காடு கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கோவில் நடை அடைக்கப்பட்டிருந்தாலும் கோவிலுக்கு முன் வெளியே நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இதனால் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : Maalaimalar