"அற்பமான அரசியல் செய்யும் ராகுல் காந்தி" - வெளுத்து வாங்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!
By : Shiva
கொரோனா காலக்கட்டத்தில் அற்பமான அரசியல் வேண்டாம் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சாடியுள்ளார். மத்திய அரசை விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அடிப்படை ஆதாரமற்ற பல தகவல்களை பதிவிட்டு வருகிறார். நேற்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஜூலை மாதம் வந்துவிட்டது, தடுப்பூசி இன்னும் வரவில்லை, தடுப்பூசி எங்கே?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் "ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி தகவல்கள் குறித்து நேற்றுதான் செய்தி வெளியிட்டேன். ராகுல் காந்திக்கு என்ன பிரச்சனை? ஆணவத்திற்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது. காங்கிரஸ் கட்சி தனது தலைமையை மாற்றுவது குறித்து ஆலோசிக்க வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.
தற்போது மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலும் ராகுல்காந்தி பதிவிற்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் தனியார் மருத்துவமனைகளுக்கு தனியாக விநியோகம் செய்யப்படுவதைத் தவிர்த்து ஜூலை மாதம் 12 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும் என்று 15 நாட்களுக்கு முன்னரே மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்த்து நாடு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற அற்பமான அரசியல் செய்துவருவது சரியானது அல்ல என்று ராகுல் காந்தி புரிந்து கொள்ளவேண்டும் என்று அவர் பதிவு செய்துள்ளார்.
மத்திய ரயில்வே அமைச்சரின் இந்த பதிவிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். கொரோனா போன்ற இக்கட்டான காலகட்டத்தில் தங்கள் அரசியல் லாபத்திற்காக தலைவர்கள் கருத்து தெரிவிக்காமல் மத்திய அரசுடன் ஒத்துழைத்து பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.