மதுரை டூ டோக்கியோ - ஏழ்மையிலும் சாதித்த மதுரை ரேவதி வீரமணி!

By : Mohan Raj
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மதுரையைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணி, டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாகக் கலந்துகொள்ளத் தேர்வாகியுள்ளது மதுரை மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
வருகின்ற ஜூலை 23-ம் தேதி டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியைக் காண உலக மக்கள் அனைவரும் ஆவலாகக் காத்திருக்கின்றனர். பல்வேறு பிரிவுப் போட்டிகளில் கலந்துகொள்ள இந்தியாவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் தேர்வாகியுள்ளனர். இதில் தமிழகத்திலிருந்து கலந்து கொள்ளும் 11 வீரர்களில் மதுரையைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதியும் ஒருவராகத் தேர்வாகியுள்ளது, மதுரை மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, சக்கிமங்கலத்தைச் சேர்ந்த ரேவதி, சிறு வயதிலயே பெற்றோரை இழந்தவர். ஏழ்மையான நிலையில் பாட்டியின் ஆதரவில் வளர்ந்தார். ப்ளஸ் டூவுக்குப் பிறகு அரசு விளையாட்டு விடுதியில் தங்கிப் படித்தார் ரேவதி. ஏழ்மையான குடும்பச் சூழ்நிலை என்பதால் பயிற்சிக்குத் தேவையான பொருள்கள் வாங்க முடியாத நிலையிலும், தடகளப் பயிற்சியாளர் கண்ணனின் வழிகாட்டலும் ரேவதி தன்னம்பிக்கையுடன் பயிற்சி பெற்று பல போட்டிகளில் முதலிடத்தை பெற்று வந்தார்.
கடந்த 4-ம் தேதி பாட்டியாலாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான தேர்வு முகாமில் கலந்துகொண்டவர், 4 × 400 கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாகப் பங்கேற்கத் தேர்வாகியுள்ளார்.
