'வீரப்பனுக்கு ஆயுதங்களைக் கடத்தியதே நாங்கதான்!' : போதையில் போலீசாரிடம் கதகளி ஆடிய மதுப்பிரியர்கள்!

By : Mohan Raj
"வணக்கம் சார்… வீரப்பனுக்கு ஆயுதங்களைக் கடத்தியதே நாங்கதான்!" என போதையில் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட மதுப்பிரியர்களை போலீசார் தலையில் அடித்துகொண்டு அனுப்பி வைத்தனர்.
தமிழகம் கொரோனோ இரண்டாம் அலை ஊரடங்கிற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. குறிப்பாக தமிழக அரசு பாரபட்சமின்றி அனைத்து மாவட்டத்திலும் மதுபான கடையை திறந்துள்ளதால் குடிமகன்கள் பழையபடி இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் கருமத்தம்பட்டி பகுதியில் இரண்டு போதை ஆசாமிகள் போலீஸாருடன் ரகளையில் ஈடுபட்டு அலப்பறை செய்துள்ளனர். விசாரணைக்காக அவர்களை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், காவல் நிலையத்தில் ரகளை செய்து, இருவரும் வெளியில் ஓடிவிட்டனர். போலீஸார் எச்சரித்தபோதும் அவர்கள் இறங்கி வருவதாக இல்லை.
நாங்க என்ன திருடினோமா... என்ன தப்பு பண்ணினோம் தலைவரே..? சொல்லுங்க... விடுங்கங்க' என்று துள்ளியுள்ளனர். போலீஸார் வீடியோ எடுப்பது தெரிந்தவுடன் அதில் ஒரு போதை ஆசாமி, மற்றொரு போதை ஆசாமியை அடிக்கவும் செய்தார். பின்னர் அடிவாங்கிய போதை ஆசாமி, `பப்ளிசிட்டிக்காகப் பண்றாங்கப்பா...' எனச் சொல்லி சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொண்டார். பிறகு கேமராவைப் பார்த்து, `சார்... வணக்கம் சார்… வீரப்பனுக்கு ஆயுதங்களைக் கடத்தியதே நாங்கதான். உ... ஊ...' என்று நக்கலாகப் பேசினார்.
இவர்களை அடிப்பதா? இல்லை அனுப்பி வைப்பதா என காவல்துறையினரே குழம்பி நின்றனர். பின்னர் அவர்கள் இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டனர்.
