உடல் வெப்பநிலையை சீராக பராமரிக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டியவைகள்!

By : Bharathi Latha
நம் உடலின் வெப்பநிலை எப்போதும் சீராக இருக்க வேண்டும். அதற்கு ஏற்று தான் நம் உடல் உறுப்புகள் தங்களைத் தயார்படுத்திக்கொண்டு வேலைச் செய்யும். அப்படி உடல் உறுப்புகள் சீராக வேலைச் செய்யும்போது தான் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஆனால் ஏதேனும் வெளிப்புற தொற்றுகளின் காரணமாக வெப்பநிலை அதிகரிக்கும்போது அது காய்ச்சலாக மாறுகிறது. காய்ச்சல் ஏற்பட்டால் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆகவே, காய்ச்சல் ஏற்படும் வேளையில் சரியான உணவுகளை எடுத்துக்கொண்டால் நாம் சீக்கிரம் காய்ச்சலில் இருந்து குணம் அடைந்து நலம் பெற முடியும்.
கஞ்சி போன்ற உணவு மட்டுமல்லாமல் பிரெட் மற்றும் பன் போன்ற உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம். காய்ச்சல் இருந்தபோதிலும் மெல்ல இதமாக இருக்கும் கோதுமை ரொட்டி போன்றவற்றை வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடலாம். கோதுமையில் நார்ச்சத்து உள்ளது என்பதால் காய்ச்சல் காலங்களில் மலச்சிக்கல் போன்ற பிரச்சினையைத் தடுக்க உதவும். கோதுமை ரொட்டியில் வைட்டமின் A, அயோடின், பொட்டாசியம், கால்சியம் மற்றும் தாதுக்கள் நிறைந்து இருப்பதால் அதை காய்ச்சல் சமயத்தில் எடுத்துக்கொள்வது மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் எடுத்துக்கொள்ளலாம்.
வறுத்த அரிசி கஞ்சி என்பது பழங்காலத்திலிருந்தே காய்ச்சலுக்கான சிறந்த உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரிசியை ரவை போல உடைத்து, தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து, உப்பு சேர்த்துக் குடிக்கலாம். இது காய்ச்சல் சமயத்தில் உடலுக்கு ஆற்றல் கொடுக்க மிகவும் நல்லது. நார்ச்சத்து நிறைந்த இந்த அரிசி கஞ்சியில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. காய்ச்சலின் போது சோர்வு மற்றும் நீரிழப்பை போக்குகிறது. உடலில் உள்ள கிருமிகளைக் கொல்லும் சக்தி அரிசி கஞ்சிக்கு உண்டு. கூடுதலாக, அவ்வப்போது கஞ்சி எடுத்துக்கொள்வதன் மூலம், இழந்த ஊட்டச்சத்துக்களை உடல் விரைவாக மீட்டெடுக்க முடியும்.
