உலகப் புகழ்பெற்ற பூரி தேர் திருவிழா- கொரோனாவுக்கு மத்தியில் கோலாகலம்!
By : Shiva
உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டம் இந்த ஆண்டு பக்தர்கள் இன்றி இன்று நடைபெற்றது. 9 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா இன்று காலை தொடங்கியது. இதனை முன்னிட்டு 2 நாள் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. விழாவில் பங்கு கொள்ளும் கோவில் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகின்றார்கள்.
உலகப் புகழ் வாய்ந்த பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத் திருவிழா ஆண்டு தோறும் 9 நாட்கள் நடைபெறும். இந்த தேரோட்டத் திருவிழாவில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பர். தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வர். இந்த தேர்களுக்கான வண்ணம் பூசும் பணி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.
பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் 'ரத்ன வீதி'யைத் தங்கத் துடைப்பத்தால் பூரி நகர மன்னர் கஜபதி பெருக்கிச் சுத்தம் செய்தார். முதலில் பலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும்.
குண்டிச்சா கோவில் நோக்கிச் செல்லும் ரத யாத்திரியின் ஒரு பகுதியாக, வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார். அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு பூரி ஜெகன்நாதர் கோயிலை வந்தடையும். இவை அனைத்தும் இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்துகொண்டு நடைபெற்றது.
பூரி ஜெகநாதர் ரத யாத்திரையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் "கடவுள் ஜெகந்நாதர் ஆசியால், நாட்டு மக்கள் அனைவரின் வாழ்வு முழுவதும் மகிழ்ச்சி, வளம் மற்றும் சுகாதாரம் ஆகியவை நிரம்பியிருக்கும்" என்று வாழ்த்து தெரிவித்து உள்ளார்.