Kathir News
Begin typing your search above and press return to search.

வாமனர் உருவம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு - சிவகங்கையில் கண்டுபிடிப்பு!

வாமனர் உருவம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு - சிவகங்கையில் கண்டுபிடிப்பு!
X

ShivaBy : Shiva

  |  17 July 2021 1:07 PM IST

சிவகங்கை‌ அருகே சோழபுரம் குண்டாங்கண்மாயில் 16 மற்றும் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால வாமனக்கல் கல்வெட்டைத் தொல்லியல் ஆர்வலர்கள் வெள்ளிக்கிழமை கண்டெடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தில் உள்ள குண்டாங்கண்மாயில் பழங்காலத்து கல்வெட்டு ஒன்று இருப்பதாக கவியோகி சுத்தானந்த பாரதி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் அளித்த தகவலின் பேரில் சிவகங்கை தொல்லியல் குழுவினர் வெள்ளிக்கிழமை கல்வெட்டை ஆய்வு செய்தனர். சுமார் நான்கரை அடி உயரமும் நான்கு பக்கங்களை கொண்ட இந்த கல்வெட்டில் 30 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பத்துக்கும் மேற்பட்ட வரிகள் சிதைந்து உள்ளதால் அவற்றில் என்ன பொறிக்கப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் காளிராசா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கல்வெட்டு 16 மற்றும் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் காலக் கல்வெட்டு என்றும் தெரிவிக்கின்றனர். இந்த கல்வெட்டு 'ஸ்வஸ்தி ஸ்ரீ' எனும் மங்களச் சொல்லோடு தொடங்குகிறது. சாகப்த ஆண்டு சிதைந்து உள்ளது. காத்தம நாயக்கர் என்ற பெயர் உள்ளது. இவர் அரச பிரதிநிதியாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் மதுனா ஆலங்குளம், குண்டேந்தல், குத்திக்குளம், பெருமாளக்குளம், கோரத்தி கண்மாய் போன்ற நீர்நிலைகள் குறிப்பிடப் பெற்றுள்ளன. இந்த கல்வெட்டில் இறுதியாக "இதற்குக் கேடு விளைவிப்பவர் கங்கைக் கரையிலே காரம் பசுவைக் கொன்ற தோஷத்தில் போவர்" எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் "இந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்ட வாமன அவதாரம் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்று. இந்த அவதாரத்தில் மஹாபலி சக்கரவர்த்தியின் கர்வத்தை அடக்க 3 அடி உயரம் கொண்ட ஏழை அந்தணராகச் சென்று, 3 அடி நிலம் கேட்டு தன் காலடியால் உலகை அளந்தார். இதனால் இந்த உருவம் மன்னர் காலங்களில் நிலம் தொடர்பான கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார். இந்த கல்வெட்டு மூலம் இடத்தைத் தானமாக கொடுத்து நீர்நிலைகளை ஏற்படுத்தியதை அறியலாம்.

இதுபோன்ற கல்வெட்டு கொல்லங்குடி அருகே சிறு செங்கிப்பட்டி மற்றும் சிவகங்கை அருகே சக்கந்தி பகுதியில் கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதனை ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News