Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக கத்தோலிக்க திருச்சபைகளில் தீண்டாமை - வாட்டிகனுக்கு புகார் கடிதம்!

தமிழக கத்தோலிக்க திருச்சபைகளில் தீண்டாமை - வாட்டிகனுக்கு புகார் கடிதம்!
X

ShivaBy : Shiva

  |  19 July 2021 8:31 AM GMT

தமிழகம் மற்றும் புதுச்சேரி கத்தோலிக்க தேவாலயங்களில் நிலவும் தீண்டாமை குறித்து தேசிய தலித் கிறிஸ்தவர்கள் சபை போப் பிரான்சிசுக்கும் பிற வாட்டிகன் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.


அந்த கடிதத்தில் இந்திய கத்தோலிக்க பிஷப் கூட்டமைப்பு மற்றும் இந்திய கத்தோலிக்க பிஷப் சபை ஆகிய அமைப்புகளும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மறைமாவட்ட பிஷப்புகளும், நேரடியாகவும் மறைமுகமாகவும் சாதிப் பாகுபாட்டை ஊக்குவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலித் கிறிஸ்தவர்கள் இறந்தவர்களை தனி கல்லறையில் புதைக்க வேண்டியதிருப்பதாகவும் சர்ச் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு கல்லறைகளிலும் கூட தலித் கிறிஸ்தவர்களை தனியாக ஒரு இடத்தில் புதைக்குமாறு கட்டாயப்படுத்தபடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

தலித் கிறிஸ்தவர்களுக்கு என்று தனி சர்ச், கல்லறை, சவ ஊர்தி போன்றவற்றை பயன்படுத்துவது, சர்ச்சுக்கு செல்லும் பொது வழியை தலித் கிறிஸ்தவர்கள் பயன்படுத்த விடாமல் தடுப்பது, திருச்சபைகளால் நடத்தப்படும் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளில் தலித்களை நியமிக்க மறுப்பது, திருச்சபை நிர்வாக விவகாரங்களில் அனுமதி மறுப்பது என்று அடுக்கடுக்கான புகார்கள் இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த விஷயங்களில் மாவட்ட வாரியாக தலித் கிறிஸ்தவர்களுக்கு நடக்கும் தீண்டாமைக் கொடுமை குறித்து தேசிய தலித் கிறிஸ்தவர்கள் சபை ஒரு பட்டியலை தயார் செய்துள்ளது.

'கத்தோலிக்க தலித்துகளின் மேம்பாட்டுக்கான திட்ட நடவடிக்கைகள்' என்ற பெயரில் 10 அம்ச திட்டத்தை தயாரித்து வைத்திருந்த போதும் தமிழக கத்தோலிக்க பிஷப் சபை தலித் கிறிஸ்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை நீக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தலித் கிறிஸ்தவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களில் 60 முதல் 70 சதவீதம் பேர் தலித் சமூகத்தினராக இருந்த போதும் திருச்சபைகள் நடத்தப்படும் கிறிஸ்தவப் பள்ளிகளில் அவர்களுக்கு பணி வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அப்படியே ஒரு தலித் கிறிஸ்தவ இருக்கு ஆசிரியர் பணி அளித்தாலும் அவரிடம் பாகுபாடு காட்டப்படுவதாகவும் அவர்களது திறமைக்கு ஊக்குவிப்போம் பணி உயர்வு வழங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது.

உயர்சாதி கிறிஸ்தவ பாதிரியார்கள் தலித் கிறிஸ்தவர்களுக்கு ஜெபக் கூட்டங்கள் நடத்துவதில்லை என்றும் தலித் கிறிஸ்தவர்களின் இல்லங்களில் நடக்கும் கூட்டுப் பிரார்த்தனைகளிலும் சடங்குகளிலும் அவர்கள் கலந்து கொள்வதில்லை என்றும் தலித் கிறிஸ்தவர் கூட்டமைப்பு கூறுகிறது.

சில பகுதிகளில் தலித் கிறிஸ்தவர்களுக்கு என்று தனி சர்ச்சுகள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் சில பகுதிகளில் தலித் கிறிஸ்தவர்களுக்கு என்று குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபைகளில் குறிப்பாக உயர்பதவியில் இருக்கும் பாதிரியார்களிடையே தீண்டாமையும் சாதிப் பாகுபாடும் அதிகம் இருப்பதாக தலித் கிறிஸ்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.




"தமிழ்நாட்டில் இருக்கும் கிறிஸ்தவர்களில் 70 முதல் 80 சதவீதம் பேர் தலித் கிறிஸ்தவர்கள் தான். அப்படி இருந்தும் தமிழகத்தில் உள்ள 18 பிஷப்களில் ஒருவர் மட்டுமே தலித் கிறிஸ்தவர். தமிழக மற்றும் இந்திய பிஷப் கவுன்சிலில் இருப்பவர்கள் உயர் பதவிகளில் நியமிக்க தகுதியானவர்களாக இருந்தாலும் தலித் கிறிஸ்தவர்களை கருத்தில் கொள்வது இல்லை. அப்படியே தகுதியான ஒரு தலித் கிறிஸ்தவருக்கு உயர் பதவி ஏதாவது கிடைத்து விட்டாலும் அவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி கிடைக்காமல் செய்து விடுகிறார்கள்" என்று தேசிய தலித் கிறிஸ்தவர்கள் சபையைச் சேர்ந்த அம்பேத்குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சபைகளில் பிஷப் பதவி காலியாகும் போது அதற்கு தகுதியான நபரை பரிந்துரைக்கும் தகுதி பிஷப் கவுன்சிலுக்கு இருக்கிறது என்றும் இதை பயன்படுத்திக் கொண்டு உயர்சாதி கத்தோலிக்க பிஷப்புகள் சாதி பாகுபாடு பார்த்து வாட்டிகனுக்கு பெயர்களை பரிந்துரைப்பதாகவும் தலித் கிறிஸ்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வாட்டிகனுக்கு எழுதப்பட்ட கடிதத்தில், "தென்னிந்தியாவில் உள்ள 1 கோடி கிறிஸ்தவர்களில் 65 சதவீதம் பேர் தலித் கிறிஸ்தவர்கள் தான். ஆனால் நான்கு சதவீதத்துக்கும் குறைவான சர்ச்களில் மட்டுமே தலித் பாதிரியார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 13 கத்தோலிக்க பிஷப்புகள் மற்றும் பிற கத்தோலிக்க நிர்வாக பதவிகளில் ஒருவர் கூட தலித் கிறிஸ்தவர் இல்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் பல தகவல்களை திரட்டி கடிதத்துடன் இணைத்துள்ள தேசிய தலித் கிறிஸ்தவர்கள் சபை, கத்தோலிக்க சர்ச்சுகளில் நிலவும் தீண்டாமை குறித்து தீவிரமாக ஆலோசித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News