ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட திமுக நிர்வாகி - ஒரு ஊரே எதிர்ப்பு!
By : Shiva
தி.மு.க. ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து நிலம் அபகரிப்பு போன்றவை சாதாரணமான நிகழ்வாக மாறிவரும் நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் நடந்தேறியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஊர் பொது மக்கள் பயன்படுத்திவரும் வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு அராஜகம் செய்வதாக தி.மு.க. நிர்வாகி மீது புகார் எழுந்துள்ள நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் வேட்டுவபாளையம் கிராமத்தில் ஊர் பொது மக்கள் பல ஆண்டுகளாக பொதுப் பாதை ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த பாதையில் தார் சாலை அமைப்பதற்காக பொதுமக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் இதற்கு கீரம்பூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாந்தி மற்றும் அவருடைய கணவர் வேட்டுவபாளையம் தி.மு.க. கிளைச் செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் மாவட்ட தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் அய்யாவூ என்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் அங்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சிமெண்ட் சாலை அமைக்கப்பட முடியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். இதனை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களிடம் தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகள் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும் தார்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட வரும் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். ஊர் பொது இடத்தை தி.மு.க. நிர்வாகிகள் ஆக்கிரமித்துக் கொண்டு அங்கு தார் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கிராம மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
Source: News J