துரைமுருகன் மீது சாதிய வன்கொடுமை புகார்? அதிரடி விசாரணைக்கு ஆணையம் உத்தரவு!
By : Shiva
வேலூர் மாவட்டம் சேர்க்காட்டில் வசிக்கும் பட்டியலின சமூக மக்களிடம் துரைமுருகனின் உறவினர்களும், தி.மு.க. நிர்வாகிகளும் சாதிய வன்கொடுமையுடன் நடந்துக் கொள்கிறார்கள் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் சுப்பிரமணி என்பவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியிலுள்ள அண்ணாநகர் சேர்க்காடு கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மீது நில அபகரிப்பு மற்றும் சாதிய வன்கொடுமை புகார் அளித்துள்ளார். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு அவர் எழுதிய புகார் கடிதத்தில், துரைமுருகனின் உறவினர்களும், தி.மு.க. கட்சியை சேர்ந்தவர்களும் சாதிய வன்கொடுமைகள் நடந்து கொள்கிறார்கள்.
இதனை துரைமுருகன் ஊக்குவிக்கும் விதத்தில் நடந்து கொள்கிறார். தன்னையும் தன் சகோதரரையும் தாக்கி நிலத்தை அபகரித்த புகாரில் துரைமுருகனின் உறவினர்களான முருகன் மற்றும் பெருமாள் என்பவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. துறைமுருகனுக்கு செல்வாக்கு இருப்பதால் காவல்துறையினர் அவருக்கு அடிப்பணிகிறார்கள். எனவே துரைமுருகன் மற்றும் அவரது உறவினர்கள் மீது சாதிய வன்கொடுமை புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் 15 நாட்களுக்குள் இந்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதியன்று நேரில் ஆஜராக வேண்டும் எனவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
துரைமுருகனின் உறவினர்கள் நில அபகரிப்பு செய்துள்ளதாகவும் அதனை எதிர்த்து கேட்டவர்களை சாதிய வன்கொடுமை செய்வதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Source: Vikatan