முக்கிய கொள்கை குறித்து பிரதமர் உரை - என்னவாக இருக்கும்?
By : Shiva
தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு ஜூலை 29 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன
தேசிய கல்விக் கொள்கை 2020 மத்திய அமைச்சரவையால் 29 ஜூலை 2020 அன்று ஒப்புதலளிக்கப்பட்டது. இந்த கல்விக் கொள்கை, இந்தியாவின் புதிய கல்வி முறையின் தொலைநோக்குப் பார்வையை கோடிட்டுக் காட்டுகிறது. இந்த புதிய கொள்கை முந்தைய தேசிய கல்விக் கொள்கைக்கு (1986) மாற்றாக நடைமுறைக்கு வருகிறது. இந்தக் கொள்கை ஆரம்பக் கல்வி தொடங்கி உயர் கல்வி வரைக்குமான விரிவான மற்றும் முழுமையான வடிவமைப்பாகும்.
இந்த கல்விக் கொள்கை கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் கல்வியோடு இணைந்த தொழிற்பயிற்சியையும் முன் வைக்கிறது. இந்த கல்விக் கொள்கை 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் கல்வி முறையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கொள்கை வெளியான சிறிது நேரத்திலேயே, எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் படிக்க யாரும் கட்டாயப்படுத்தப்படமாட்டார்கள் என்றும், கற்பித்தல் ஊடகம் ஆங்கிலத்திலிருந்து எந்த பிராந்திய மொழிக்கும் மாற்றப்படாது என்றும் அரசாங்கம் தெளிவுபடுத்தியது.
இந்த தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுவதை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 29ம் தேதி வியாழக்கிழமை 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக
உரையாற்றுகிறார். புதிய கல்வி கொள்கை நடைமுறைபடுத்தப்படுவது குறித்தும், புதிய திட்டங்கள், தேசிய கல்விக் கொள்கையில் உள்ளவை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்தும் பிரதமர் உரையாற்ற உள்ளதாக தெரிகிறது.