இனி மின்சார கட்டண பிரச்சனைகள் குறித்த கவலை வேண்டாம்.. வருகிறது மத்திய அரசின் பலே திட்டம்!
By : Shiva
நாடு முழுவதும் மின்சாரக் கட்டணங்களை எளிதில் கணக்கிட்டு டிஜிட்டல் முறையில் செலுத்துவதற்காகவும், தங்களது மின்சாரப் பயன்பாடு குறித்து நுகர்வோர் உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும், மின்சாரச் சிக்கனத்தைக் கடைபிடிக்கும் விதமாகவும், முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் வாய்ப்பை வழங்குவதற்காகவும், மின்சார விநியோக நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவும் ஸ்மார்ட் மீட்டர்களை (திறன்மிகு கணக்கீட்டுக் கருவிகள்) பொருத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தேசிய திறன்மிகு தொகுப்பு இயக்கத்தின் கீழ், 7.23 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை ஒருங்கிணைப்பதில் ஸ்மார்ட் மீட்டர்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து 2022ஆம் ஆண்டுக்குள் 1,75,000 மெகாவாட் மின் திறனை நிறுவ மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் சூரிய மின்சக்தி மூலமாக 1,00,000 மெகாவாட் மின்சாரமும், காற்று மின்சக்தி மூலமாக 60,000 மெகாவாட் மின்சாரமும், பயோமாஸ் மூலமாக 10,000 மெகாவாட் மின்சாரம் மற்றும் சிறியபுனல் மின்சாரத் திட்டங்கள் 5000 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்வதற்காக மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு முக்கிய காரணியாக விளங்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை ஊக்குவிப்பதற்காக, மாநிலங்களுக்கிடையேயான விநியோகத்திற்கான கட்டணங்கள் தள்ளுபடி, பசுமை எரிசக்தி வழித்தடங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் ஊக்குவிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த வகையான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் அதிக அளவில் கிடைக்கப்பெற்றால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்புகளும் வருங்காலங்களில் ஏற்படாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அதிக அக்கறை கொண்டுள்ளதையே இதுபோன்ற நடவடிக்கைகள் காட்டுகிறது என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.