"கல்லை கடவுள் என்று ஏமாந்து போய் கும்பிடுகிறார்கள்"- சிலைகளை உடைத்த மர்ம நபர்!
By : Shiva
கர்நாடகாவில் தொடர்ச்சியாக கோவில் சிலைகளை உடைத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கற்சிலைகளை கடவுள் என்று சொல்லி இந்துக்கள் ஏமாற்றப்படுவதாக நினைத்ததால் சிலைகளை உடைத்ததாக விசாரணையில் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கே.ஆர்.நகர் பகுதியில் இந்துக் கடவுள் சிலைகள் தொடர்ந்து சேதப்படுத்தப்பட்டும் அழிக்கப்பட்டும் வந்துள்ளன. இதனால் தீவிர விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் மர்ம நபர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஸ்ரீ சித்தலிங்கேஸ்வரர் மற்றும் ஸ்ரீ மலே மகாதேஸ்வரா ஆலயத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த சிவலிங்கங்களை உடைத்தது தெரிய வந்தது.
இதேபோல் கே.ஆர்.பேட்டை காவல் நிலைய எல்லையில் உள்ள லக்ஷ்மி தேவியின் சிலையை உடைத்து கிணற்றில் வீசியுள்ளார். மேலும் பீரவல்லி கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைய முற்பட்டபோது ஆட்கள் வந்ததால் தப்பியோட நேரிட்டதாகவும் கைது செய்யப்பட்ட நபர் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக இந்து தெய்வங்களின் சிலையை உடைப்பதை வழக்கமாக வைத்துள்ள அவர் பத்தாம் வகுப்பு வரை பயின்று பின்னர் விவசாயம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. மக்கள் ஏமாந்து போய் கற்சிலைகளை கடவுள் என்று நம்பி வழிபட்டு வருவதால் சிலைகளை உடைத்ததாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். மத ரீதியான பிரச்சினை என்பதால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக கைது செய்யப்பட்டவரின் விவரங்களை காவல்துறையினர் வெளியிடாமல் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : Pgurus