Kathir News
Begin typing your search above and press return to search.

கோவையில் முதல் முறையாக இயற்கை முறையில் கேரட் சாகுபடி - ஆச்சரியமூட்டிய ஈஷா விவசாய இயக்கம்!

கோவையில் முதல் முறையாக இயற்கை முறையில் கேரட் சாகுபடி - ஆச்சரியமூட்டிய  ஈஷா  விவசாய  இயக்கம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Dec 2021 11:49 AM GMT

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் விளையும் கேரட்டை கோவையில் சமவெளியில் சாகுபடி செய்து ஈஷா விவசாய இயக்கம் விவசாயிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

இது தொடர்பாக அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் இயற்கை விவசாய பயிற்சிகளை நடத்தி வரும் நாங்கள் கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, தஞ்சாவூர் ஆகிய 4 இடங்களில் மாதிரி பண்ணைகளை உருவாக்கி பராமரித்து வருகிறோம். மொத்தம் 60 ஏக்கர் பரப்பில் பல்வேறு விதமான பயிர்களை பரிசோதனை முயற்சியாக வெவ்வேறு இயற்கை நுட்பங்களை பயன்படுத்தி பயிர் செய்து வருகிறோம்.

அந்த வகையில், கோவையில் செம்மேடு கிராமத்தில் உள்ள எங்களுடைய பண்ணையில் இந்த முறை வெண்டைக்கு இடையே கேரட்டை ஊடுப்பயிராக நடவு செய்தோம். 110 நாட்களுக்கு பிறகு நாங்கள் எதிர்ப்பார்த்தை விட நல்ல பருமனாமாகவும் நீளமாகவும் கேரட் விளைந்து உள்ளது. பொதுவாக காய்கறி கடைக்கு சென்று 1 கிலோ கேரட் வாங்கினால் 12 முதல் 13 கேரட் பிடிக்கும். ஆனால், நாங்கள் எந்தவித ரசாயனங்களையும் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் விளைவித்ததன் காரணமாக 6 அல்லது 7 கேரட்களை எடைப்போட்டாலே ஒரு கிலோ வந்துவிடும். அதை வைத்து பார்க்கும் போது விளைச்சலும் நல்ல முறையில் வந்துள்ளது.

கேரட் மட்டுமின்றி, பீட்ரூட், முள்ளங்கி, கொத்தமல்லி ஆகியவற்றையும் ஒரே இடத்தில் வெண்டை சாகுபடியில் ஊடுபயிராக செய்துள்ளோம். இந்த முறை மழை அதிகமாக பெய்தும் லாபத்தில் எந்த குறையும் ஏற்படவில்லை.

இதேபோன்று, பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி அரசியையும் நாங்கள் கடந்த 3 வருடமாக முழுவதும் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறோம். கடந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு இரண்டே கால் டன் விளைச்சல் கிடைத்துள்ளது. எங்கள் தோட்டத்திற்கு அருகில் ரசாயன விவசாயம் செய்யும் விவசாயிகள் எடுக்கும் விளைச்சலை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி, நாங்கள் பரிசோதனை செய்து வெற்றி பெற்ற இயற்கை விவசாய தொழில்நுட்பங்கள் அனைத்தையும் விவசாயிகளுக்கு நேரடி களப் பயிற்சியாக சொல்லி கொடுக்குறோம். இதுவரை 12 ஆயிரம் விவசாயிகளுக்கு நாங்கள் இயற்கை விவசாய பயிற்சிகள் அளித்துள்ளோம். அதில் நிறைய பேர் வெற்றிகரமாகவும் லாபகரமாக விவசாயம் செய்து முன்னோடி விவசாயிகளாக மாறி உள்ளனர். பின்னர், அவர்களுடைய தோட்டத்திலேயே புது விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சிகளை தமிழ்நாடு முழுவதும் கற்றுக்கொடுத்து வருகிறோம்." என்றார்.

மேலும், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து கூறுகையில், "இயற்கை விவசாய முறையில் விளைவிக்கும் விளைப்பொருட்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால், விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதோடு மட்டுமின்றி மண் வளம் அதிகரிக்கிறது. தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் ரசாயன உரங்களின் பயன்பாட்டால் மண் வளம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

குறைந்தப்பட்சம் 3 சதவீதம் கரிம பொருட்கள் (Organic Content) இருந்தால் தான் அதை வளமான மண் என சொல்ல முடியும் என ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பு கூறுகிறது. ஆனால், நம் இந்தியாவில் அதன் அளவு 0.5-க்கும் கீழாக உள்ளது. இதே நிலை நீடித்தால், இந்த மண் முற்றிலும் வளம் இழந்து எவ்வித விவசாயமும் செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்படுவோம். ஆகவே, மண் வளத்தை மீட்க மரம் வளர்ப்புடன் கூடிய இயற்கை விவசாயமே ஒரே தீர்வு.

இதை உணர்ந்து தான் மத்திய, மாநில அரசுகள் தற்போது இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க முயற்சிகள் எடுத்து வருகின்றன. இது மிகவும் வரவேற்கத்தக்கது. ரசாயன உரங்களுக்கு மானியம் அளிப்பது போல் இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பிரத்யேக மானியங்கள் அளித்தால் அதிகப்படியான விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள்" என்றார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News