Kathir News
Begin typing your search above and press return to search.

தியாகராஜர் ஆராதனை: பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை பாடி அசத்திய ஈஷா சமஸ்கிரிதி மாணவர்கள்!

தியாகராஜர் ஆராதனை: பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை பாடி அசத்திய ஈஷா சமஸ்கிரிதி மாணவர்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Feb 2022 8:51 AM GMT

கோவையில் இன்று (பிப். 6) நடைபெற்ற தியாகராஜர் ஆராதனையில் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் புகழ்பெற்ற பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக விளங்கும் தியாகராஜ சுவாமிகள் தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவை ஆற்றியவர். தன் வாழ்நாளில் பக்தி ரசம் சொட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றி சாதனை படைத்தவர். அவரின் ஒப்பற்ற சேவைக்கு நன்றி செலுத்தும் விதமாக கோவை ராம் நகரில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் தியாகராஜர் ஆராதனை விழா பிப்ரவரி 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

3-ம் நாளான இன்று ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்களின் இசை நிகழ்ச்சி காலை 10.30 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது. இதில் 21 சம்ஸ்கிரிதி மாணவர்கள் பங்கேற்று தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

கமாஸ் ராகத்தில் சீதாபதியுடன் பாடலை தொடங்கிய அவர்கள் அதை தொடர்ந்து வராளி ராகத்தில் மணிவர்ணா பாடலை பாடினர். பின்னர், நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அனைவரும் குழுவாக இணைந்து புகழ்பெற்ற பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை பாடி அசத்தினர். இந்த அற்புதமான இசை நிகழ்வை ஏராளமான பொதுமக்களும், இசை ஆர்வலர்களும் கண்டும் கேட்டும் மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சி தொடர்பாக எழுத்தாளர் திரு. மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் பேசுகையில், "தியாகராஜ சுவாமிகள் தனது இசை கீர்த்தனைகளால் இறைவனை பாடி வழிப்பட்டார். அந்த அருமையான கீர்த்தனைகளை ஈஷா சம்ஸ்கிரிதி குழந்தைகள் இன்று அர்ப்பணித்துள்ளனர். ஈஷா சம்ஸ்கிரிதி குழந்தைகள் நம்முடைய செவ்வியல் இசை மரபில் கை தேர்ந்தவர்கள். கர்னாடக இசை பண்ணை மிக சரியாக பாடும் அவர்கள் தேவார இசை பண்ணை பாடுவதிலும் தேர்ந்தவர்கள். இசை மட்டுமின்றி பரத நாட்டியமும், தற்காப்பு கலையான களரியையும் முறையாக கற்றவர்கள். பாரம்பரியமான யோக கலையிலும் தியான கலையிலும் சிறந்து விளங்குபவர்கள்.

காவிரி கிளை நதியாக பல இடங்களில் பரவுவது போல தியாகராஜர் ஆராதனையும் பல இடங்களுக்கு பரவும் பாங்கில் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் தங்களின் இசை அர்ப்பணிப்பை இன்று கோவையில் செய்துள்ளனர். உள் அன்போடும், உணர்வோடும் அவர்கள் பாட கூடிய கீர்த்தனைகள் நம்முள் இருக்கும் இறைவன் அருளை மீட்ட வல்லவை" என்றார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News