குறைவான போலீஸார், கடைசி நேர நிகழ்ச்சி மாறுதல் - மதுரை சித்திரை திருவிழாவில் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு
By : Mohan Raj
லட்சக்கணக்கான மக்கள் கூடும் மதுரை சித்திரை திருவிழாவில் பாதுகாப்பு தொடர்பாக அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததன் காரணமாக மக்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் இருவர் பலியாகினர், 11பேர் காயமடைந்துள்ளனர்.
மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். சுவாமியைக் காண வந்த தேனி, உத்தமபாளையம், கோகிலா புரத்தைச் சேர்ந்த செல்வம், மதுரை செல்லூரை சேர்ந்த ஜெயலட்சுமி ஆகியோர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தனர், 13 பேர் காயமடைந்தனர். திருவிழா ஏற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியும் பாதுகாப்பு ஏற்பாடு, திட்டமிடலில் அதிகாரிகள் கோட்டை விட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பக்தர்கள் தரப்பில் கூறியதாவது, "தல்லாகுளத்தில் இருந்து அழகர் புறப்பட்டு கோரிப்பாளையம் வரும்பொழுது அமெரிக்கன் கல்லூரி எதிர்ப்புறம் உள்ள வலதுபுறம் மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆண்டுதோறும் இந்த நடைமுறை இருப்பதால் அவரை தரிசிக்க நாங்கள் மண்டகப்படிகளில் அருகில் காத்திருந்தோம் ஆனால் மண்டகப்படிக்கு வராமல் நேரடியாக வைகை ஆற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார், இதை சற்றும் எதிர்பாராத பக்தர்கள் சுவாமியை தரிசிக்க ஒரே நேரத்தில் எதிர் திசையை நோக்கி சென்ற பொழுது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது தள்ளுமுள்ளுவில் பலர் கீழே விழுந்தனர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்" என கூறினார்.
கோவில் நிர்வாகத்தின் திடீர் முடிவு இந்த நெரிசலுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து இந்து ஆலய பாதுகாப்பு குழு மாநில செய்தி தொடர்பாளர் சுந்தரவடிவேல் கூறியதாவது, "பக்தர்கள் வழக்கமாக வந்து செல்லும் பாதைகளை பாதுகாப்பு என கூறி போலீசார் அடைத்து விட்டனர். இதனால் கூட்ட நெரிசல் அதிகரித்து மக்கள் வெள்ளத்தால் நெரிசல் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த திருவிழா நடப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதை மாவட்ட நிர்வாகம் கணிக்கத் தவறி விட்டது இதனால் இந்த நெரிசல் ஏற்பட்டது" என்றார்.
கள்ளழகர் கோவில் நிர்வாகம் தரப்பில் கூறியதாவது, "தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருந்து சுவாமி புறப்பட்ட நிலையில் பக்தர்கள் கூட்டத்தை தாண்டி குறிப்பிட்ட நேரத்திற்குள் வைகை ஆற்றுக்குள் வர தாமதமானது, போலீஸ் ஒத்துழைப்பு இல்லாததே இதற்கு முக்கிய காரணம், சுவாமிக்கு அருகில் 160 போலீசார் இருப்பார் என ஆலோசனை சமயத்தில் தெரிவித்தனர் ஆனால் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே போலீசார் இருந்தனர், குறித்த நேரத்திற்குள் சுவாமி ஆற்றுக்குள் இறங்க வேண்டும் என்பதால் கோரிப்பாளையம் மண்டகப்படி களுக்குச் செல்ல முடியவில்லை" என்றனர்.
மேலும், "வைகை ஆறு, தல்லாகுளம் பெருமாள் கோவில் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் பக்தர்களுக்கு இழப்பீடு வழங்க 5 கோடி ரூபாய்க்கு கோவில் நிர்வாகம் காப்பீடு செய்துள்ளது இறந்த இருவருக்கு இழப்பீடு பெற்று தர முடியுமா என காப்பீட்டு நிறுவனத்திடம் விசாரித்து வருகிறோம்" என கூறினார்கள்.
புறப்பட்டதே எச்சரிக்கை!
வைகை ஆற்றில் இறங்குவதற்காக ஏப்ரல் 14-ல் கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்டார் பல்லக்கை சீர்பாதங்கள் தூக்கியபோது சுவாமி எதிரே வைக்கப்பட்டிருந்த 90 ஆண்டு பழமையான முகம் பார்க்கும் கண்ணாடி உடைந்தது ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை சுவாமி மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறார் என பக்தர்கள் என கருதினர்.
இது அபசகுனமாக கருதப்பட்ட நிலையில் மாற்று கண்ணாடி வைப்பது குறித்து பூப்போட்டு பார்க்கப்பட்டது இதில் சுவாமி சம்மதம் தெரிவிக்காததால் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதி அருகில் உள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து சுவாமி இருந்தபோது வேறு கண்ணாடி எழுதி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதுரை புறப்பட்டார். கோவில் தரப்பினரோ, "இது அபசகுனமில்லை சுவாமி திருஷ்டி கழிந்தது போல் கருத வேண்டும்" என்றனர்.
அரசு தரப்பில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி தலா 5 லட்சம் ரூபாய், படுகாயம் அடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் மேலும் சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்றார். ஆனால் மதுரை அழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் என்பது முக்கியமான நிகழ்வாகும் அந்த நிகழ்வில் நடக்கும் சுப, அபசகுனங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் ஒரு மன உறுத்தல் ஏற்படுத்த செய்யும் இப்படி சுவாமி புறப்பாடு நடக்கும் பொழுது கண்ணாடி உடைந்தது, மதுரை அழகர் வைகையில் இறங்கும் பொழுது இருவர் கூட நெரிசலில் இறந்தது இதனால் இந்த ஆண்டு என்ன நடக்குமோ என பக்தர்கள் மனா கலக்கத்தில் உள்ளனர். அழகர் அருளால் நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.