இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை, யாழ்ப்பாணம் சிறையில் சந்தித்த அண்ணாமலை!
By : Dhivakar
இலங்கை சென்றுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் மக்களின் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால், அனைத்து தரப்பட்ட மக்களின் வாழ்வுநிலை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இலங்கையில் வசிக்கும் தமிழர்களும் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், இலங்கை மலையகத்திலுள்ள 'இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்' சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்களை அழைத்ததை தொடர்ந்து, அண்ணாமலை அவர்கள் 4 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை சென்றுள்ளார்.
அங்கு சென்றுள்ள அண்ணாமலை பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை ஏற்படுத்தி வருகிறார். இலங்கையில் உள்ள தமிழக மக்களிடம் " 'ஸ்ரீ ராமபிரானுக்கு அணில் உதவியது போல இலங்கை தமிழர்களுக்கு உதவியாக இருப்பேன்' " என்று உறுதி அளித்து, அம்மக்களுக்கு நம்பிக்கைகளை ஊட்டினார்.
அவரது சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக, கடந்த மார்ச் 23ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கை சிறைக்குச் சென்று சந்தித்தார். இதுகுறித்து அவர் பதிவிட்ட டுவிட்டர் பதிவில் "இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இன்று யாழ்ப்பாண சிறையில் நான் இன்று சந்தித்தேன். தமிழக பா.ஜ.க சார்பாக அவர்களுக்கு உடை மற்றும் உணவுப் பொருட்டுகளை வழங்கினோம். நமது இந்தியத் தூதரகத்தின் துரித முயற்சியால் சிறைபிடிக்கப்பட்ட இந்த மீனவர்கள் விரைவில் நமது தமிழக மண்ணிற்கு வந்து அடைவார்கள்!"
என்று தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"இலங்கை சுற்றுப்பயணம் செய்யும் அண்ணாமலை அவர்களின் செயல்பாடுகள், இலங்கை தமிழர்கள் மத்தியிலும், தமிழ்நாட்டிலுள்ள தமிழ் மக்கள் மத்தியிலும் நம்பிக்கையை விதைத்து வருகிறது" என்று பல அரசியல் விமர்சகர்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.