Kathir News
Begin typing your search above and press return to search.

பாரதம் திரும்பினார் சத்குரு: குஜராத்தில் உற்சாக வரவேற்பு அளித்த இந்திய கடற்படை!

பாரதம் திரும்பினார் சத்குரு: குஜராத்தில் உற்சாக வரவேற்பு அளித்த இந்திய கடற்படை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 May 2022 3:48 PM GMT

ஐரோப்பாவில் எலும்பு வரை ஊடுருவும் குளிரிலும், அரேபிய பாலைவனங்களில் சுட்டெரிக்கும் வெயிலிலும் 67 நாட்களில் 26 நாடுகளில் பைக்கில் பயணித்த சத்குரு வெற்றிகரமாக இன்று (மே 29) பாரத மண்ணில் காலடி எடுத்து வைத்தார்.

குஜராத்தில் உள்ள ஜாம்நகர் துறைமுகத்தில் இந்திய கடற்படையின் இசை குழுவினர் சத்குருவிற்கு மேள தாளங்களுடன் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். ஜாம்நகர் அரச குடும்பத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படை ஆகிய முப்படைகளின் கமாண்டிங் ஆபிஸர்கள், அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் உட்பட ஏராளமான முக்கிய விருந்தினர்கள் பங்கேற்றனர். அத்துடன் மண் காப்போம் இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் வழிநெடுகிலும் நின்று கொண்டு சத்குருவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவர்களின் அன்பான வரவேற்பை மனதார ஏற்றுக்கொண்ட சத்குரு அங்கு பேசுகையில், "இன்று மட்டுமின்றி, குறைந்தப்பட்சம் அடுத்த 30 நாட்கள் நீங்கள் மண் வளப் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து பேச வேண்டும். உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளின் அரசாங்கங்களும், மண் வளத்தை மீட்டெடுக்க சட்டங்களை உருவாக்கும் வரை நீங்கள் இதற்காக விடாது குரல் கொடுக்க வேண்டும். உங்கள் கரங்களில் இருக்கும் மொபைல் போன் ஒரு சக்திவாய்ந்த கருவி. அதை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் மண் வளம் குறித்து தொடர்ந்து பேசுங்கள். இதற்காக, தினமும் குறைந்தபட்சம் 15 முதல் 20 நிமிடங்களாவது செலவிடுங்கள்" என கூறினார்.

ஜாம்நகர் அரச குடும்பத்தின் பிரதிநிதி திருமதி. ஏக்தபா சோதா அவர்கள் பேசுகையில், "இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். சத்குரு மண் வளப் பாதுகாப்பு குறித்து உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அரசாங்கங்கள் கொள்கை மாற்றங்களை மேற்கொள்ள அழுத்தம் கொடுத்து வருகிறார். இது மிக முக்கியமான விஷயம்" என்றார்.

மண் வளத்தை மீட்டெடுக்க உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி 100 நாட்களில் 30,000 கி.மீ மோட்டார் சைக்கிளில் பயணித்து வரும் சத்குரு தனது பயணத்தை மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து தொடங்கினார். அவர் சென்ற நாடுகளில் எல்லாம் மதம், இனம், மொழி, கலாச்சாரம் போன்ற வேறுபாடுகள் கடந்து மக்கள் சிறப்பான ஆதரவு அளித்தனர்.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஐரோப்பாவிலும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் மத்திய ஆசியா மற்றும் அரேபியாவிலும், யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் இஸ்ரேலிலும் சத்குரு பேரன்போடு வரவேற்கப்பட்டார். மதம், இனம், தேசம், மொழி கடந்து அனைத்து தேசத்து தலைவர்களும், பொதுமக்களும் 'மண் காப்போம்' இயக்கத்திற்கு பேராதரவு அளித்தனர். பல மொழி பேசி, பல்வேறு இனமாக வாழும் மக்களை சத்குருவின் இந்த இயக்கம் 'மண்' என்ற ஒற்றை புள்ளியில் இணைத்துள்ளது. தனது பயணத்தின் நிறைவு பகுதியாக, பாரத தேசத்தின் பல்வேறு மாநிலங்களில் வழியாக ஜூன் 21-ம் தேதி தமிழ்நாடு வர உள்ளார்.

ட்விட்டரில் டிரெண்ட் ஆனது

சத்குருவின் இந்தியா வருகையை முன்னிட்டு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கானோர் சத்குருவை வரவேற்று பதிவுகளை பதிவிட்டனர். இதனால், #BharatWelcomesSadhguru என்ற ஹாஸ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. இந்தியாவில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக ட்ரெண்டிங் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News