பெங்களூர்-பனாரஸ் 'பாரத் கவுரவ்' ரயில் சேவை! யாத்ரீகர்களுக்கு கர்நாடக அரசு வழங்கும் மானியம் என்ன தெரியுமா?
By : Dhivakar
பெங்களூரு: இந்துக்களின் புனித காசி யாத்திரை இனிதாக அமைய, 'பாரத் கவுரவ்' இரயில் சேவையை ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்க இருப்பதாக, கர்நாடக மாநில மந்திரி கூறியுள்ளார்.
இந்துக்களின் புனித யாத்திரையாக கருதப்படும் காசி யாத்திரைக்கு, கர்நாடக மாநில பா.ஜ.க அரசும் இந்திய ரயில்வே IRCTC'யும் இணைந்து 'பெங்களூரு-பனாரஸ் பாரத் கவுரவ்' ரயில் சேவை திட்டத்தை தொடங்கவுள்ளது. பெங்களூருவில் இருந்து பனாரஸ் வரை இந்த ரயில் இயக்கப்படவுள்ளது. மேலும் யாத்ரீகர்களின் நலன் கருதி மாநில அரசு சார்பில் யாத்ரீகர்களுக்கு மானியமும் வழங்கப்படவுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் முசாராய் அமைச்சர் சசிகலா ஜோல், நேற்று(ஜூலை 11) இதுகுறித்து அளித்த பேட்டியில் " நாட்டிலேயே முதல் மாநிலமாக கர்நாடக மாநிலம் தான், இந்த ரயில் சேவையின் மூலம் பயன்பெறும் யாத்ரீகர்களுக்கு மானியம் வழங்க உள்ளது. இந்துக்கள் ஒவ்வொருவரும் வாழ்நாளில் செல்ல நினைக்கும் காசி யாத்திரையை நாங்கள் நிஜமாக்க வேலை செய்துவருகிறோம். முதலமைச்சர் பசவராஜ் பொம்மைதான் இத்திட்டத்திற்கு முதுகெலும்பாக இருந்து வருகிறார். அவருக்கு இத்தருணத்தில் நன்றி கூற விரும்புகிறேன்" என்று கூறினார்.
பாரத் விரைவு ரயில் பெங்களூரு முதல் பனாரஸ் வரை, மொத்தம் 4,161கி.மீ கடக்கவுள்ளது. மொத்தம் பதினான்கு பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில், பதினோரு பெட்டிகள் பயணிகளால் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு பெட்டியிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள பிரிசித்தி கோயில்களின் சிறப்புகளை எடுத்துக் கூறும் விதமாக அமைய உள்ளது. ஒரு பெட்டி மட்டும் யாத்திரீகர்கள் வழிபடுவதற்காக ஏதுவாக அமையவுள்ளது.
இந்த யாத்திரைக்கு ருபாய்15 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி யாத்திரை மையங்களில் உணவு, தண்ணீர், தங்குமிடம் மற்றும் உள்ளூர் போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும் கர்நாடக மாநில அரசு சார்பாக ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது.
கர்நாடக மாநில அரசின் இந்த உன்னத முயற்சி, தமிழகத்திலுள்ள காசி யாத்திரிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று தமிழகத்திலும் ரயில் சேவைகளை தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.