'சிவன் கோயில் இடிப்பு சம்பவம்' தற்காலிக தடை விதித்த நீதிமன்றம்! பக்தர்களின் பிரார்த்தனை வெற்றி!
By : Dhivakar
கோவை: 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோயில் இடிப்புக்கு தற்காலிக தடை விதித்தது நீதிமன்றம்.
கோவை அவினாசி சாலை கோல்ட்வின்ஸ் பகுதியில், நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் ஒன்று உள்ளது. அக்கோயிலுக்கு அன்றாடம் அப்பகுதி மக்கள் பலர் இறைவனை தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கோவிலின் அருகே உள்ள, அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளின் கார்களை 'பார்க்' செய்வதற்கு ஏதுவாக, 'சிவன் கோயிலை இடிக்க வேண்டும்' என புகார் அளிக்கப்பட்டது. இது குறித்த வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கோயில் சார்பாக யாரும் ஆஜர் ஆகாத நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் உடனடியாக காவல்துறை உதவியுடன், மாநகராட்சி அதிகாரிகள் 'புல்டோசர்' இயந்திரத்தைக் கொண்டு கோவிலை இடித்தனர்.
இச்செய்தியை அறிந்த அக்கோயிலின் பக்தர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கோயில் இடிக்கப்படும் காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். "ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய" என்று பெண்கள் பலர் கதறி அழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அறிந்த பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி அமைப்பினர், மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் தற்காலிகமாக கோவில் இடிப்பு பணி நிறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அதன்பின் கோவிலுக்குள் பக்தர்கள் ஒன்று கூடி, 8 மணி நேரம் கூட்டு பிரார்த்தனை நடத்தினர். அதன் விளைவாக கோவில் இடிப்புக்கு தற்காலிக தடை விதித்தது நீதிமன்றம். நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து 'ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய' என்று கோஷமிட்டு பக்தர்கள் மகிழ்ந்தனர்.