சுதந்திர போராட்டத்தின் முதல் பெண்! வீரமங்கை வேலு நாச்சியார்.

By : Kanaga Thooriga
ராணி வேலு நாச்சியார் ஜனவரி 3, 1730 இல் பிறந்தவர். 1796 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த இவர் சிவகங்கை பகுதியை ஆண்ட இராணியாவார். இந்தியாவிலேயே பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து போரிட்ட முதல் விராங்கனை வேலு நாச்சியார் என்ற பெருமைக்குரியவர்.
வேலு நாச்சியார் ராமநாதபுரத்தின் இளவரசி. அரசர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி அவர்களுக்கும், ராணி சகந்தி முத்தாத்தாளுக்கும் மகளாக பிறந்தவர். தங்களுக்கு மகன் இல்லையென்றாலும், தங்களின் பட்டத்திற்கு வாரிசாக விளங்கிய வேலு நாச்சியாரை மகன் போலவே கருதி வளர்த்தனர். குதிரை ஏற்றம் தொடங்கி வளரி, சிலம்பம், வில்-அம்பு ஏய்தல் உள்ளிட்ட பல்வேறு ஆயுதம் வீச்சு வரை சிறப்பான போர் பயிற்சிகளை பெற்றவர். அதுமட்டுமின்றி பிரெஞ்சு, உருது, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளை கற்று தேர்ந்தவர்.
நாச்சியாருக்கு 16 வயது ஆன போது முத்துவடுகநாதர் உடையதேவருடன் திருமணம் நடந்தது . இந்த தம்பதியருக்கு பிறந்த மகளின் பெயர் வெள்ளச்சி. இந்த தம்பதியர் இருபது ஆண்டுகள் வரை அவர்களின் ராஜ்ஜியத்தை ஆண்டு வந்தனர். அதாவது முத்து வடுகநாதரை பிரிட்டிஷார் வீழ்த்தும் வரை இவர்களின் ஆட்சி தொடர்ந்தது .
ஆர்காட் நவாப்பின் மகன் துணையுடன் சிவகங்கையில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள் வேலு நாச்சியாரின் கணவரை கொன்றனர். அந்த போரை தான் "காளையர் கோவில் " போர் என்று அழைக்கிறோம். அங்கிருந்து தன் மகளுடன் தப்பிய வேலு நாச்சியார் திண்டுக்கல்லில் கோபால் நாயகரின் பாதுகாப்பில் 8 ஆண்டுகள் இருந்தார்.
இந்த எட்டு ஆண்டுகளில் மைசூரை ஆளும் ஹைதர் அலியை சந்தித்த நாச்சியார் உருது மொழியில் அவருடன் உரையாடி, பிரிட்டிஷாரின் அட்டூழியத்தை எடுத்துரைத்தார். அவர் தம் உருது மொழி பேச்சிலும், ஒரு பெண்ணாக இருந்து கொண்டு அவருக்கிருந்த நெஞ்சுரத்திலும் கவரப்பட்ட ஹைதர் அலி, வேலு நாச்சியருக்கு உதவ ஒப்பு கொண்டார்.
பிரிட்டிஷாரை எதிர்க்க வேண்டுமென்ற நோக்கத்தில் ஏழாண்டுகள் திண்டுக்கல் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை, விருப்பாச்சி ஆகிய பகுதிகளில் மறைந்து மறைந்து வாழ்ந்து வந்த வேலு நாச்சியார் மிகுந்த சிரத்தையாலும், முயற்சியாலும் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி எதிர்ப்புப்படை ஒன்றை உருவாக்கினார். இந்த எதிர்ப்பு படைக்கு ஹைதர் அலி வழங்கிய 5000 போர் வீரர்கள், 5000 குதிரை வீரர்கள் மற்றும் பீரங்கிப்படை ஆகியவை பேருதவியாக இருந்தன.
எட்டு ஆண்டுகால திட்டமிடலின் காரணமாக திப்பு சுல்தான், மருது சகோதரர்கள், தாண்டவராயன் பிள்ளை ஆகியோரின் உதவியோடு பிரிட்டஷர்களை எதிர்த்து களம் கண்டார்.
இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் யாதெனில் வேலு நாச்சியாரின் படை தளபதியாகவும், வளர்ப்பு மகள் போலவும் இருந்த குயிலி எதிரணியினரின் வெடி மருந்து கிடங்கின் மீது தற்கொலை தாக்குதலை நிகழ்த்தி எதிரிப்படையினரை முற்றிலும் அழித்தார்.
அழுந்த சொல்ல வேண்டுமென்றால், வெள்ளையருக்கு எதிராக இந்தியாவில் நிகழ்ந்த முதல் தற்கொலை தாக்குதல் இதுவென்று கூட சொல்லலாம் . வெள்ளையரின் படைகளை ஒவ்வொரு இடமாக வெற்றி கொண்டு வந்த நாச்சியார் மானாமதுரையில் நிகழ்ந்ட கடைசி யுத்தத்திலும் வெற்றி கொண்டு கோட்டை பிடித்தார்.
பிற்காலத்தில் வேலுநாச்சியாருக்கு பின் அவர் மகள் வெள்ளச்சி அரசாள, மருது சகோதரர்கள் நிர்வாக பொறுப்பை கவனித்து வந்தனர். ஹைதர் அலி தனக்கு செய்த நன்றியை நினைவு கூறும் விதமாக சாரங்கியில் மசூதி மற்றும் தேவாலயங்களை நாச்சியர் கட்டினார் என சொல்லப்படுகிறது. வெள்ளையனை எதிர்த்த திடமான நெஞ்சம், 66 ஆம் வயதில் வயது மூப்பினால் உயிர் நீத்தார்.
வீரமங்கை வேலு நாச்சியாரின் நினைவாக 2014 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஆறடி வெங்கல சிலையை நிறுவினார்.
ஆண் பெண் பேதங்களை கடந்து வீரமும், தேசப்பற்றும் யாவருக்கும் சமமானது என்பதை தன் வீர தீர செயல்களின் எடுத்துரைத்த வேலு நாச்சியரை இந்த 75 ஆம் சுதந்திர ஆண்டில் போற்றி துதிப்போம்.
