Kathir News
Begin typing your search above and press return to search.

பெங்களூரு சத்குரு சந்நிதியில் ஆதியோகி திருவுருவம் திறப்பு - கர்நாடக முதல்வர் திரு. பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்

பெங்களூரு சத்குரு சந்நிதியில் ஆதியோகி திருவுருவம் திறப்பு - கர்நாடக முதல்வர் திரு. பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்

Mohan RajBy : Mohan Raj

  |  17 Jan 2023 2:33 AM GMT

தனி மனிதர்களின் ஆன்மீக வளர்ச்சிக்காக பெங்களூரு அருகே சிக்கபல்லாபுரத்தில் உருவாக்கப்பட்டுள்ள சத்குரு சந்நிதியில் 112 அடி உயர ஆதியோகி திருவுருவத்தை மாண்புமிகு கர்நாடக முதல்வர் திரு. பசவராஜ் பொம்மை அவர்கள் நேற்று (ஜனவரி 15) திறந்து வைத்தார்.

சத்குரு முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் கர்நாடக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. சுதாகர், கல்வி துறை அமைச்சர் திரு. பி.சி. நாகேஷ் உள்ளிட்ட பல முக்கிய விருந்தினர்கள் பங்கேற்றனர்.

இவ்விழாவில் முதல்வர் திரு. பசவராஜ் பொம்மை அவர்கள் பேசுகையில், “ஆதியோகி கர்நாடக மாநிலத்திற்கு வந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். ஆதியோகி மிக நீண்ட காலத்திற்கு மக்களுக்கு ஊக்கம் அளிப்பார். நான் கோவைக்கு சென்று ஆதியோகியை தரிசனம் செய்து உள்ளேன். நாம் அவரின் திருவுருவத்தை சில வினாடிகள் உற்று நோக்கினாலே, பல விஷயங்களையும், ஆழமான அனுபவத்தையும் உணர முடியும்.” என்றார்.

இவ்விழாவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களின் முக்கியத்துவம் குறித்து பேசிய சத்குரு, “தனி மனிதர்களின் உள்நிலை மாற்றத்திற்கும், பொருள் தன்மை தாண்டிய அம்சங்களை உணர்வதற்கும் பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி வாய்ந்த இடங்கள் தேவைப்படுகின்றன. அவர்கள் கற்பனை செய்தும் பார்த்திராத வாழ்வின் அம்சத்தையும், அதன் மூலத்தையும் உணர்வதற்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்கள் அவர்களுக்கு உதவும்” என்றார்.

மேலும், ஆதியோகி திறப்பு விழா தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விழிப்புணர்வான உலகத்தை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து சாத்தியங்களையும் ஆதியோகி வழங்குகிறார். பொறுப்புணர்வோடும், விழிப்புணர்வோடும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பவர்களுக்கு தான் எதிர்காலம் சொந்தம். இந்த மகிழ்ச்சியையும், ஆதியோகியின் அருளையும் உணர்வீர்களாக, அன்பும் ஆசியும்” என பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/SadhguruJV/status/1614662499030421504

இவ்விழாவில்,‘ஆதியோகி - யோகத்தின் மூலம்’ என்ற பெயரில் கன்னடத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள புத்தகத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் வெளியிட்டார். இந்த பிரமாண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஈஷா தன்னார்வலர்களுக்கு பாராட்டு தெரிவித்த அவர் “வெறும் சில மாதங்களில் ஆதியோகி திருவுருவம் உருவாக்கப்பட்டு திறக்கப்பட்டு இருப்பது அசாத்தியமானது” என தெரிவித்தார்.

இவ்விழா கோவையில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவை போல் பிரமாண்டமாக நடைபெற்றது. பிரபல கர்நாடக நாட்டுப் புற கலை வடிவமான ‘கம்சாலே’ நடனம், கேரளாவின் புகழ்பெற்ற ‘தெய்யம்’ நடனம், ஈஷா சம்ஸ்கிருதி மற்றும் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரின் இசை, நடன நிகழ்ச்சிகள் என விழா களைக்கட்டியது. மேலும், ஆதியோகி திவ்ய தரிசனமும் நடைபெற்றது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News