Kathir News
Begin typing your search above and press return to search.

ஈரோட்டில் ஆதியோகி ரத யாத்திரை - ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம்

ஈரோட்டில் ஆதியோகி ரத யாத்திரை - ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம்

Mohan RajBy : Mohan Raj

  |  3 Feb 2023 10:03 AM GMT

கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருந்து ஈரோட்டிற்கு வந்த ஆதியோகி ரதம் கிராமங்கள்தோறும் பயணித்தது. இதன்மூலம், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளைப் பெற்றனர்.

மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் ‘ஆதியோகி ரத யாத்திரை’ ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு 7 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவத்துடன் கூடிய 5 ரதங்கள் கடந்த மாதம் கோவையில் இருந்து புறப்பட்டு தமிழ்நாட்டின் 4 திசைகளில் பயணத்தை தொடங்கின.

அதில் ஒரு ரதம் பொங்கல் தினத்தன்று ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்தது. பாரியூர், சூரம்பட்டி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர், ஆப்பகூடல், கூகலூர் என பல்வேறு இடங்களுக்கு பயணித்து பிப்ரவரி 1-ம் தேதி கோபிக்கு வருகை தந்தது. பல்வேறு கிராமங்களில் வீதி வீதியாக சென்ற இந்த ரதத்திற்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர்.

குறிப்பாக, வெளியூர்களுக்கு அதிகம் பயணம் செய்யாத கிராமப்புற மக்கள், முதியவர்கள் என பல தரப்பட்ட மக்கள் தங்கள் வீட்டை தேடி ஆதியோகி வந்ததை பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். கோபியில் இருந்து கொடிவேரி, அரசூர், பெருந்துறை, பங்களா புதூர் போன்ற இடங்களுக்கு செல்லும் இந்த ரதம் பிப்ரவரி 10-ம் தேதி வரை ஈரோட்டு மாவட்டத்திற்கு இருக்கும். பின்னர், அங்கிருந்து கோவைக்கு பயணிக்கும்.

இந்த யாத்திரையில் பிப்ரவரி 18-ம் தேதி கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலும், கோபியில் உள்ள லிங்கபைரவியிலும் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

உலகில் தோன்றிய முதல் யோகியான சிவன் சப்தரிஷிகளுக்கு (அகத்தியர் உள்ளிட்ட 7 ரிஷிகளுக்கு) யோக விஞ்ஞானம் முழுவதையும் பரிமாறினார். சப்தரிஷிகள் ஒவ்வொருவரும் அந்த விஞ்ஞானத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து சென்றனர். இது ஆன்மீகத்தில் மாபெரும் அமைதி புரட்சி நிகழ அடித்தளமாக அமைந்தது.

இதற்காக, ஆதியோகிக்கு நன்றியை வெளிப்படுத்தும் விதமாக கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 112 அடியில் ஆதியோகியின் மார்பளவு திருவுருவம் சத்குரு அவர்களால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இத்திருமேனியை பாரத பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தார். ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெறுவதற்காக தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் அங்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News