பிரதமர் மோடி அடுத்த மாதம் ஜப்பான் , ஆஸ்திரேலியா பயணம் - ஏன் தெரியுமா?

By : Karthiga
பிரதமர் மோடி மே மாதம் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். முதலில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகருக்கு செல்கிறார். அங்கு மே 19 - ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஜி-7 குழும வருடாந்திர உச்சி மாநாடு நடக்கிறது. அதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். கடந்த மாதம் இந்தியாவுக்கு வந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார் .அதை ஏற்று மோடி பங்கேற்க இருக்கிறார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோபேடன் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள் .ஜப்பான் பயணத்தை முடித்த பிறகு ஒரு பசிபிக் தீவுநாட்டிற்கு பிரதமர் மோடி செல்கிறார் .அங்கிருந்து ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகருக்கு அவர் பயணம் செய்கிறார். சிட்னி நகரில் மே 24 - ஆம் தேதி குவாட் தலைவர்கள் உச்சி மாநாடு நடக்கிறது .அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா ,ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்த அமைப்பு 'குவாட்' என்று அழைக்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் மாநாட்டை நடத்துகிறார். ஒட்டுமொத்த நிலவரம் குறித்து தலைவர்கள் விவாதிக்கிறார்கள். அங்கு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றியும் பேசுகிறார்கள். மேலும் போரின் பாதிப்புகள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள் .இரு மாநாடுகளுக்கு வரும் தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாகவும் சந்தித்து பேசுகிறார் . 'குவாட்' மாநாடு நடத்தப்படுவதை ஆஸ்திரேலிய பிரதமர் அலுவலகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது . தலைவர்களை வரவேற்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தது.
அமெரிக்க வெள்ளை மாளிகையும் தன் பங்கு அறிக்கையின் மூலம் இதை அறிவித்தது. உலக சுகாதாரம் உயர்தர உள்கட்டமைப்பு புதிய தொழில்நுட்பங்கள் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளில் ஒத்துழைப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறியது. ஆனால் பிரதமர் மோடியின் பயணம் குறித்து மத்திய அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.
