கர்நாடகாவில் ரயிலைக் கவிழ்க்க சதி என்று பரவும் வீடியோ!
By : Kathir Webdesk
கர்நாடகாவில் ரயிலை கவிழ்க்க நடந்த சதி முறியடிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
“கர்நாடகாவில் கையும் களவுமாக மாட்டிய சிறுவர்கள்.. தீர விசாரிக்க வேண்டிய செயல் இது.. ரயிலை தடம் புரளச் செய்ய இது போல் எவ்வளவு பேர் கிளம்பி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியா முழுக்க ரயில்களை கவிழ்க்க சதி நடப்பது போலவும், கர்நாடகாவில் நடந்த சதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது போலவும் பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஒடிசா ரயில் விபத்துக்குப் பிறகு சமூக ஊடகங்களில் பரவும் இது போன்ற வீடியோக்கள் மிகப் பெரிய அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன.
உண்மையில் கர்நாடகாவில் நடந்ததாக பரவும் தகவல் உண்மையில்லை. கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் ரயில்வே போலீசார் இந்த சம்பவம் 2018ல் நடந்தது என்று உறுதி செய்தனர்.
அருகில் உள்ள குடிசைப்பகுதியைச் சார்ந்த சிறுவர்கள் விளையாட்டாக இப்படி செய்ததாகவும், ரயிலைக் கவிழ்க்கும் உள்நோக்கம் அவர்களுக்கு இல்லை என்றும், இனி இவ்வாறு செய்யக்கூடாது என்று ரயில் பாதை பராமரிப்பாளர் எச்சரிக்கை செய்து, சிறுவர்களை அனுப்பியதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
இதன் மூலம் பழைய வீடியோவை எடுத்து வந்து, ஒடிசா சம்பவத்துக்கு காரணத்தைக் கற்பிக்க முயற்சி செய்திருப்பது தெரிகிறது. சிறுவர்கள் தவறாக ரயில் பாதையில் கல்லை வைத்து விளையாடிய வீடியோவை தவறாக, மிக மோசமான பின்னணி இருப்பது போன்று தவறாகப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது.