Kathir News
Begin typing your search above and press return to search.

மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய நெல் திருவிழா - விவசாயிகளை தொழில்முனைவோர் ஆக்கும் நிகழ்ச்சி

மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய நெல் திருவிழா - விவசாயிகளை தொழில்முனைவோர் ஆக்கும் நிகழ்ச்சி

Mohan RajBy : Mohan Raj

  |  29 July 2023 4:56 AM GMT

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘பாரத பாரம்பரிய நெல் திருவிழா’ வரும் 30-ம் தேதி திருச்சியில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இது தொடர்பான, பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சி பிரஸ் கிளப்பில் நேற்று (ஜூலை 28) நடைபெற்றது. இதில் மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துகுமார் அவர்கள் கூறியதாவது:

திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இவ்விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு முன்னோடி இயற்கை விவசாயிகளும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த வேளாண் வல்லுநர்களும் ஆலோசனைகள் வழங்க உள்ளனர். குறிப்பாக, இந்நிகழ்ச்சி விவசாயிகளை வெறும் உற்பத்தியாளர்களாக மட்டுமின்றி தொழில்முனைவோராகவும் மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய நெல் விவசாயத்திற்காக பல்வேறு விருதுகளை வென்ற கேரளாவைச் சேர்ந்த முன்னோடி பெண் விவசாயி திருமதி. புவனேஸ்வரி, 120 நெல் ரகங்களை மீட்டெடுத்த தெலுங்கானா விவசாயி திரு. ஸ்ரீகாந்த், 5 ஏக்கர் நிலத்தில் 160 வகையான நெல் ரகங்களை பயிரிட்டு சாதனை படைத்த கர்நாடகா விவசாயி திரு. பி.கே. தேவராவ், பிரபல பூச்சியியல் வல்லுநர் திரு. பூச்சி செல்வம் ஆகியோர் நெல் விவசாயத்தில் லாபம் எடுக்கும் நுட்பங்களை விவசாயிகளுக்கு சொல்லி கொடுக்க உள்ளனர்.

அத்துடன் உணவு மருத்துவ நிபுணர் திரு. ஹீலர் சக்திவேல் யுவராஜ் அவர்கள் பாரம்பரிய நெல் ரகங்களை சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் குறித்து பேச உள்ளார். மேலும், பாரம்பரிய அரிசியில் 214 பதார்த்தங்களை தயாரித்து விற்பனை செய்யும் பெண் தொழில் முனைவர் திருமதி. மேனகா, மதிப்பு கூடுதல் துறையின் சாதனை புரிந்து வரும் தான்யாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. தினேஷ் மணி ஆகியோர் மதிப்பு கூட்டுதல் மூலம் விவசாயிகளின் லாபத்தை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து பேச உள்ளனர்.

இதுதவிர, முன்னோடி விவசாயிகள் திரு. பெரிய சாமி (கரூர்), திரு. செந்தில் குமார் (திருவாரூர்), திரு. விஜய் மகேஷ் (தஞ்சாவூர்), திருமதி.மஹாலட்சுமி (காஞ்சிபுரம்) உள்ளிட்டோர் தங்களுடைய வெற்றி அனுபவங்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர். மேலும், நடவு முதல் அறுவடை வரை விவசாயிகளே கண்டறிந்த எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இதில் இடம்பெற உள்ளது. விழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு விதை நெல் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இத்திருவிழா ஜூலை 30-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 83000 93777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கரூரை சேர்ந்த முன்னோடி விவசாயி திரு.பெரியசாமி அவர்களும் உடன் பங்கேற்றார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News