மதுரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து.. காரணம் இதுதான் ரயில்வே விளக்கம்..
By : Bharathi Latha
மதுரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்த உத்தரவு. மதுரை ரயில் நிலைய யார்டில் நிறுத்தப்பட்டிருந்த, ஐஆர்சிடிசி டூரிஸ்ட் கோச் நேற்று முன்தினம் காலை 5.15 மணியளவில் தீவிபத்துக்குள்ளானது குறித்து, பெங்களூரு தெற்கு வட்டம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி விசாரணை நடத்துவார். நாளை காலை 9.30 மணியளவில், மதுரை ரயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் உள்ள டிஆர்எம் மாநாட்டு அரங்கில் விசாரணை தொடங்கும்.
சம்பவம் மற்றும் விஷயம் தொடர்பாக அறிந்தவர்கள் ஆதாரங்களை வழங்க விரும்பினால் டிஆர்எம் அரங்கில் அவற்றை வழங்கலாம். எழுத்துபூர்வமாக தெரிவிக்க விரும்புவர்கள், ரயில்வே பாதுகாப்பு ஆணையர், தெற்கு வட்டம், ரயில் சன்ரக்ஷா பவன், பெங்களூரு - 560 023 என்ற முகவரிக்கு எழுதலாம் என தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஆர்.குகனேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் ரயில்வே தரப்பில் இது பற்றி தெளிவாக குறிப்பிடும் பொழுது, இந்த ரயில் விபத்திற்கு முக்கிய காரணமாக பயணிகள் ரயில்வே துறைக்கு தெரியாமல் சிலிண்டர்களை பயன்படுத்தியது தான் என்றும் கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக நடந்த அலட்சியத்தின் காரணமாக இந்த விபத்து அரங்கேறி இருக்கிறது.
Input & Image courtesy: News