ஈஷா சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி - பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன் பரிசுகள் வழங்கினார்
By : Mohan Raj
‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரமக்குடி எம்.எல்.ஏ திரு.முருகேசன் அவர்கள் பரிசுகள் வழங்கி வாழ்த்து கூறினார்.
ஈஷா அவுட்ரீச் சார்பில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கப்பட்ட 15-வது ஈஷா கிராமோத்சவம் திருவிழா செப்.23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் ஒருபகுதியாக, தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்துடன் இணைந்து மாநில அளவிலான கபடி போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக, மாவட்ட அளவிலான போட்டிகள் 38 மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்திற்கான போட்டிகள் பரமக்குடியில் உள்ள ராஜா சேதுபதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆக.26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளில் ஏராளமான வீரர், வீராங்கணைகள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். முதலிடம் பிடித்த அணி வீரர்களுக்கு பரமக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. முருகேசன் அவர்கள் பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து கூறினார்.
பரமக்குடி முனிசபல் தலைவர் திரு. சேது கருணாநிதி, ராம்நாடு மாவட்ட வாலிபால் சங்க தலைவர் திரு. ரவிசந்திர ராமவன்னி, தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் மாவட்ட செயலாளர் திரு. ஜெயகுமார் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பாக ஆடிய வீரர்கள் மதுரையில் நடக்கும் மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள். அதில் வெற்றி பெறும் அணிகள் கோவையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள்.
இறுதிப் போட்டியில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் ஆண்கள் அணிகளுக்கு முறையே, ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.1 லட்சம், ரூ.50,000 பரிசு தொகையாக வழங்கப்படும். மேலும், பெண்கள் பிரிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே, ரூ.2 லட்சம், ரூ.1 லட்சம், ரூ.50,000 மற்றும் ரூ. 25,000 பரிசு தொகையாக வழங்கப்படும்.
‘ஈஷா கிராமோத்சவம்’ திருவிழா கிராமப்புற மக்களின் வாழ்வில் விளையாட்டை ஒரு அங்கமாக மாற்றும் நோக்கத்துடன் 2004-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.