தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்!! த.வா.க தலைவர் கோரிக்கை!

By : G Pradeep
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 9 கடந்த ஐந்தாம் தேதி தொடங்கி தற்பொழுது நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் உள்ள பிரபலங்கள் என பலர் பங்கு பெற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டு களித்து வரும் நிலையில், இது தமிழர்களின் கலாச்சாரத்தை கெடுக்கும் வகையில் இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து தொடர்ச்சியாக எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியை மாணவ மாணவிகள் உட்பட பலரும் பார்த்து வரும் நிலையில் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் ஒழுக்க நெறி போன்றவை இல்லாமல் இருக்கிறது. இந்த அளவிற்கு தரக்குறைவான நிகழ்ச்சியினை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் படுக்கையறை காட்சியிலிருந்து ஆண் பெண் முத்தமிட்டுக் கொள்வது என பல தவறான காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இதை பார்க்கும் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து பார்க்கக் கூடிய வகையில் இல்லாததால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபோன்று தரக்குறைவான நிகழ்ச்சியை நடத்தி தான் பணம் சம்பாதிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பிய நிலையில் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் அளித்துள்ளதாகவும், முதல்வர் மு க ஸ்டாலினுக்கு இந்த நிகழ்ச்சியை தடை செய்ய கோரிக்கை முன் வைத்துள்ளதாக கூறினார்.
கோரிக்கை அளித்து இரண்டு நாட்கள் ஆன நிலையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அரசு நடவடிக்கை எடுக்க விட்டால் விஜய் டிவி நிறுவனம் மற்றும் பிக் பாஸ் ஹவுஸ் முன்பு அனைவரையும் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.
