கரூர் சம்பவம் குறித்து அங்கேயே முகாமிட்டு முதல் கட்ட விசாரணையை தொடங்கிய சிபிஐ குழு!!
By : G Pradeep
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் நடந்த தாவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த நிலையில் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு இது குறித்து விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் குழு அமைத்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 29 மற்றும் 30ஆம் தேதியில் நடத்தப்பட்ட விசாரணையில் ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது. ஆனால் த.வெ.க மற்றும் பாதிக்கப்பட்டோர் தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கடந்த 13ஆம் தேதி இவ்வழக்கை விசாரிக்க சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இதில் நீதிபதி அஜய் ரஸ்டோகி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவினர் கண்காணிப்பில், சி.பி.ஐ விசாரணையைத் துவங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தற்பொழுது சி.பி.ஐ எஸ்.பி பிரவின்குமார் உள்ளிட்ட 4 அதிகாரிகள் கரூரில் முகமிட்டுள்ளதாகவும், கடந்த ஒரு வாரமாக ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவும் கரூரில் தங்கி இருப்பதாகவும், சிபிஐ அதிகாரிகளிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்கி முதல் கட்ட விசாரணையை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
