கோவில் இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு தடை! தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!

By : G Pradeep
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களின் கும்பாபிஷேக விழாக்களை தொடர்ச்சியாக அரசு நடத்தி வருகிறது. இது மட்டுமல்லாமல் கோவில்களின் கட்டுமான பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களான பழனி மற்றும் திருச்செந்தூர் போன்ற கோவில்களுக்கு வரும் வருமானத்தை வைத்து கோவில் பராமரிப்பு மற்றும் பக்தர்களுக்கு ஏற்ற வசதிகளை செய்வது போன்ற பணிகளை செய்யாமல் வணிக வளாகங்களை கட்டுவது மற்றும் மற்ற பிற வேலைகளை கோவில் பணத்தில் செய்வது என இந்து சமய அறநிலையத்துறை செய்து வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தது. மேலும் கந்த கோட்டம் கோவில் கோவில் நிலத்தில் கோவில் நிதியை வைத்து வணிக வளாகம் மற்றும் குடியிருப்பு கட்டுவதற்கு வேலைகள் நடந்து வரும் நேரத்தில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வில்லிவாக்கத்தை சேர்ந்த ஏ.பி.பழனி என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம் கோவில் நிலத்தில் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு தடை விதித்தது. மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை அடிப்படையில் உள்ள கோவில்களுக்கு இது குறித்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
கோவில் இடத்தில் பக்தர்களின் வசதிக்காக மட்டுமே பயன்படுத்தவும், வணிக வளாகங்கள் கட்டுவதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்தது. இச்செயல் குறித்து தமிழக அரசு மற்றும் கந்தக்கோட்டம் கோவில் நிர்வாகம் போன்றவை பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு வழக்கை ஒத்திவைக்கப்பட்டது.
