இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைக்க போகிறதா? விலை உயர்வுக்கு இதுதான் காரணமா?

By : G Pradeep
தொடர்ச்சியாக அமெரிக்க மற்றும் ஐரோப்பியாவின் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வந்த நிலையில் தற்பொழுது இந்தியா தன்னுடைய இறக்குமதி அளவை குறைக்கவோ அல்லது முற்றிலுமாக நிறுத்துவதற்கு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அரசுக்கு சொந்தமான சில சுத்திகரிப்பு நிறுவனங்களையும் புதிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான செயல்களை செய்து வருவதாகவும், தங்களுடைய கொள்முதல் திட்டங்களை மறு மதிப்பீடு செய்வதற்கான வேலைகளும் நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் நடந்து வரும் மோதல் காரணமாக ரஷ்ய எரிசக்தி நிறுவனங்களில் முக்கியமான நிறுவனங்களை அமெரிக்கா மற்றும் அதனுடைய நட்பு நாடுகள் தடை விதித்தது. அதில் பிரிட்டன் நாடும் இணைந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்ய இயற்கை எரிவாயு இறக்குமதிக்கு தடை விதிக்க ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் இந்தியாவும் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி பற்றி மறு பரிசீலனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3% வரை உயர்ந்தது. ப்ரெண்ட் எண்ணெய் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 65 டாலருக்கு மேல் சென்றது.
WTI கச்சா எண்ணெய் 1.89 டாலர் அதிகரித்து 3.2% விலை உயர்வுடன் ஒரு பீப்பாய்க்கு 60.39 ஆக அதிகரித்து. இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், விலை உயர்வுக்கு இதுதான் காரணம் என்று தொடர்ச்சியாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
