வடகிழக்கு பருவமழையால் இத்தனை பேர் பாதிக்கப்பட்டனரா? அமைச்சர் கூறிய பகீர் தகவல்!

By : G Pradeep
புதிய புயல் வங்க கடலில் உருவானதை தொடர்ந்து தொடர்ச்சியாக பருவ மழை பல இடங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து ஆய்வு செய்ய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ராமச்சந்திரன் நேரில் வந்த போது செய்தியாளர்களை சந்தித்து தமிழகத்தில் கடந்த 16ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதாக கூறினார்.
இந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை எடுத்த கணக்கெடுப்பின்படி மொத்த மழையின் அளவு 21% ஆக இயல்பை விட சற்று அதிகமாக உள்ளது. இந்த புயலானது ஆந்திராவிலிருந்து சென்னையை நோக்கி வரவிருக்கும் நிலையில் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார்.
இந்த புயலினால் பெரிய அளவு பாதிப்பு எதுவும் இருக்காது என தெரிவித்தார். இந்த வடகிழக்கு பருவ மழையால் தற்பொழுது வரை 31 பொதுமக்கள் இறந்திருப்பதாகவும், கடலூர் மாவட்டத்திலேயே ஆறு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இறந்தவர்களில் 23 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், காயமடைந்த 47 பேரில் 14 பேருக்கும், 485 கால்நடைகள் உயிரிழந்த நிலையில் 335 கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதாகவும், 20425 கோழிகள் உயிரிழந்த நிலையில் 16,574 கோழியின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டதாகவும், 1760 வீடுகள் மற்றும் குடிசைகள் சேதமடைந்த நிலையில் 1460 வீடுகளுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு இருப்பதாகவும், மீதி உள்ளவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
நீர்நிலைகளில் தற்பொழுது நீரளவு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் அதிகரித்தால் அந்த பகுதியில் இருக்கும் மக்களை தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறினார்.
