தொடர்ச்சியாக கைது செய்யப்படும் தூய்மை பணியாளர்கள்!! மீண்டும் ஒரு போராட்டமா??

By : G Pradeep
தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் பில்டிங் அருகில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிரந்தர பணி வேண்டும் என்பதற்காகவும், தனியார்மயமாக்கலை எதிர்த்தும் 13 நாட்களாக போராடி வந்த நிலையில் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கானது சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தொடர்ச்சியாக வெவ்வேறு வழிகளில் தூய்மை பணியாளர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அவரவர் வீடுகளில் உண்ணாவிரதம் இருப்பது என போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து தற்பொழுது மண்டலங்கள் 5 மற்றும் 6 போன்றவற்றின் அலுவலகங்கள் அருகில் சாலையை சுத்தம் செய்து அவர்களை பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்பொழுது மழைக்காலம் வந்து விட்டதால் மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பழைய நிலையிலேயே தங்களை பணிக்கு எடுக்குமாறு கூறியதோடு மக்களுக்காக சம்பளம் இல்லாமல் பணியாற்ற தயாராக இருப்பதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்து அரும்பாக்கம், மதுரவாயில் போன்ற இடங்களில் இருக்கும் மண்டபங்கள் மற்றும் சமூகக்கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
