திடீரென்று இடிந்து விழுந்த தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளம் சுவர்!! ஆய்வு நடத்தி வரும் வல்லுனர் குழு!!

By : G Pradeep
கன்னியாகுமரி சுசீந்திரம் பகுதியில் அமைந்திருக்கும் தாணுமாலய சுவாமி கோயிலின் தெப்பக்குளத்தை தூர்வாரி சீரமைப்பதற்காக கடந்த மார்ச் 2ம் தேதி ரூ.35 லட்சம் பணம் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் இடப்பட்டு கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி அதற்கான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக திடீரென்று குளத்தின் வடக்கு பகுதியில் இருக்கும் சுவர் இடிந்து விழுந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து பார்வையிட வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் மனோ தங்கராஜ் சுசீந்திரம், மாவட்ட கலெக்டர் அழகுமீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் வந்திருந்தனர். அப்போது அங்கிருந்த இளைஞர்கள் அமைச்சரிடம் தெப்பக்குளத்தில் இருந்து அதிக அளவில் மண் எடுக்கப்பட்டதாக புகார் அளித்தனர்.
அதன் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம், இது குறித்து ஆய்வு செய்வதற்கு வல்லுனர் குழு வந்திருப்பதாகவும், தொல்லியல் துறை வல்லுநர்கள் மற்றும் ஐ.ஐ.டி வல்லுநர்களிடம் ஆலோசனை படி மீண்டும் பழமை மாறாமல் தெப்பக்குளம் சரி செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும் இளைஞர்கள் அளித்த புகார் உண்மையாக இருந்தால் நிச்சயமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இது குறித்து முதல்வரிடமும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இடமும் பேசி விரைவில் கூடுதல் நிதி ஒதுக்கி பணிகள் நிறைவு செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும் வல்லுனர்களுடன் குலத்தை ஆய்வு செய்து குளத்திற்கு நீர் வரும் மற்றும் வெளியேறும் மடை, சுரங்கம் போன்றவற்றை பார்வையிட்டனர். விரைவில் கலந்தாலோசித்து தரமான கட்டுமான பணிகள் செய்து தரப்படும் என்று தெரிவித்தனர்.
