நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய சீர்திருத்தம்! பிரதமரின் புதிய சட்டத்திற்கு தொழிற்சாலைகள் வரவேற்பு!

By : G Pradeep
தமிழ்நாடு சிறு தொழில் சங்கத் துணை தலைவர் சுருளி வேல், மத்திய அரசு புதிய தொழிலாளர்கள் குறியீடுகளை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் 10 பேருக்கு குறைவாக வேலை செய்யும் நிறுவனங்களில் இஎஸ்ஐ வழங்குவது மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாய நியமன ஆணை போன்ற பல நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளது.
மேலும் 40-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்யும் நிறுவனங்களில் வருடத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனையும், சரியான நேரத்தில் ஊதியம் வழங்குதல் போன்றவை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும் குழப்பங்களை நீக்கி ஒரே மாதிரியான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ஒரு ஆண்டு பணி முடிந்தாலும் அவர்களுக்கு பணிக்கொடை ஆனது அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் தொழிலாளர்கள் வளர்ச்சியடைவதோடு மட்டுமல்லாமல் வெளிப்படை தன்மையுடனும், சமூக பாதுகாப்பு உயர்ந்தும், வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தென்னிந்திய மில்கள் சங்கத் தலைவர் துறை பழனிசாமி, ஆர்.கே.சண்முகம் செட்டி தொடங்கி வைத்த சைமா பல்வேறு சட்டங்களை கொண்டு வருவதிலும், தொழிலாளர்களின் நலனுக்காகவும் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதனால் நிறைய தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் வரலாற்று சிறப்புமிக்க தொழில் சட்டங்களை பிரதமர் அறிமுகப்படுத்தி உள்ள நிலையில் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த புதிய சட்டத்தால் தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்றும், பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளடக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தம் ஆனது ஜிஎஸ்டி சீர் திருத்தத்திற்கு பின்பு வந்திருக்கக்கூடிய மிகப்பெரிய சீர்திருத்தம் என்றும், இதனால் உலக சந்தையில் இந்தியாவின் வணிகமானது உயர்வுக்கு செல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.
