தமிழகத்தில் கொட்டப்படும் கேரளாவின் கழிவுகள்!! பல ஆண்டுகளாக நடந்து வருவதாக மக்கள் குற்றச்சாட்டு!!

By : G Pradeep
தமிழகம், கேரளவின் எல்லையாக உள்ள தேனி மாவட்டம் இரண்டு மாநிலங்களுக்கும் மையப்பகுதியாக திகழ்ந்து வருகிறது. கேரளாவில் சுகாதாரம், கழிவு மேலாண்மையில் சில விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
இதனால் பல்வேறு கழிவுகள் கேரளப் பகுதியில் இருந்து தமிழக எல்லையில் வந்து கொட்டிச் செல்வது தொடர்ச்சியாக நடந்து வருவதை அறிந்து உளவுத் துறை போலீஸார் அளித்த தகவலின் பேரில் குமுளி காவல் ஆய்வாளர் விஜயபாண்டியன் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து கேரளாவில் இருந்து வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்ட பொழுது குமுளி, வண்டிப்பெரியாறு பகுதியை சேர்த்த கழிவுகள் மூன்றுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் ட்ரம்களில் இறைச்சி, காய்கறி மற்றும் ஹோட்டல் கழிவுகள் இருந்தன.
கூடலூர் வெட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் விவேக் (26) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இது போன்ற செயல்களில் ஈடுபடும் மற்ற வாகனங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் பொதுமக்கள் போலீஸ் மற்றும் வனத்துறையினருக்கு தெரியாமல் இந்த சம்பவம் நடப்பதற்கு வாய்ப்பில்லை.
பல ஆண்டுகளாக இதுபோன்று தமிழக எல்லை பகுதியில் கழிவுகளை கொட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது என்று என்று தெரிவித்து வருகின்றனர்.
