இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்!! திமுக அரசுக்கு அழுத்தம்!!

By : G Pradeep
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம் தீவிரமாகி உள்ளது. 2009 மே 31-ல் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் அடிப்படை ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ம் தேதி பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மற்றொரு அடிப்படை ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டதால், ஒரே ஒரு நாள் வித்தியாசத்தில் இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.3,170 குறைந்துள்ளது.
இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி ஆசிரியர்கள் 15 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து நாலரை ஆண்டுகளாகியும் ஊதிய முரண்பாடு களையப்படாததால் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) போராட்டத்தை தொடர்கிறது.
இதனால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதிமுக, பாமக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள், இதர ஆசிரியர் சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பிலும் போலீஸாரின் கைது நடவடிக்கையை கண்டித்து வருகின்றனர்.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் சார்ந்த கோரிக்கையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன என திமுக தெரிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியின்படி அதை சரிசெய்வதற்கு அரசுக்கு போதிய அவகாசம் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளது.
