தமிழ்நாடு வேளாண் உற்பத்தியை அதிகரிப்பு: 1 கோடியே 53 லட்சம் மண்வள அட்டைகள் விநியோகம்!

By : Bharathi Latha
வேளாண் உற்பத்தி மற்றும் மண்வள மேலாண்மையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையாக சமநிலையைப் பராமரிப்பது மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைக்கான செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து விவசாயிகளுக்கும் மண் ஆரோக்கியம் மற்றும் மண்வளம் பராமரிப்பு திட்டத்தின் கீழ், கடந்த 2014-15-ம் ஆண்டு முதல் மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய வேளாண் அமைச்சக இணையமைச்சர் ராம்நாத் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி. என். அண்ணாதுரை, திரு ஜி. செல்வம், திரு கே. நவாஸ்கனி ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இதனைத் தெரிவித்தார். மண்வளத்தைக் கண்டறிய மண்மாதிரி எடுக்கப்பட்டு, ஹைட்ரஜன், இயற்கை, கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், சல்ஃபர் போன்ற சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக்களான துத்தநாகம், தாமிரம், இரும்பு, மாங்கனிசு மற்றும் போரான் சத்துக்கள் மற்றும் மின்னூட்டம் போன்றவற்றின் அளவுறுக்கள் குறித்த பகுப்பாய்வு, நிலையான நடைமுறைகளின் கீழ் பரிசோதிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அதாவது, குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மண்வள அட்டையை விநியோகிக்கும் வகையில் விவசாய நிலங்களில் மண் ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் குறித்த பகுப்பாய்வை மதிப்பீடு செய்யும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மண்ணில் உள்ள ஊட்டசத்துக்களின் நிலை குறித்த தகவல்கள் மற்றும் மண் ஆரோக்கியம், வளத்தை மேம்படுத்துவதற்கு தேவையான உர வகைகள் மற்றும் அவற்றின் பயன்பாட்டு அளவு குறித்த பரிந்துரைகளும் மண்வள அட்டைகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். இதன் மூலம் குறைந்த செலவில் அதிக விளைச்சலை பெற முடியும் என்று அவர் தெரிவித்தார். 2014-15-ம் ஆண்டிலிருந்து இதுவரை தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 52 லட்சத்து 51 ஆயிரத்து 840 மண்வள அட்டைகள் உருவாக்கப்பட்டு விநியோகிக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
