மக்கள் தானமாக வழங்கிய 100 கோடி நிலம் அபேஸ்!
By : Shiva
காஞ்சிபுரம் அருகே 100 கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி செய்யப்பட்டுள்ளதால் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே கொளப்பாக்கம் கிராமத்தில் சாலை வசதிக்காக கிராம மக்கள் 2004ஆம் ஆண்டு 10 ஏக்கர் 21 சென்ட் நிலத்தை ஊராட்சியின் பெயரில் தானமாக வழங்கியுள்ளனர்.
அப்போது பழனி என்பவர் தனக்கு சொந்தமான 85 சென்ட் இடத்தை அரசுக்கு தானமாக வழங்கியுள்ளார். இந்நிலையில் இந்த இடம் சாலை வசதிக்காக பயன்படுத்தப்படாமல் பெருமாள்சாமி என்பவர் தனது பெயருக்கு பட்டா மாற்றிக்கொண்டு விட்டதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பழனி புகார் கடிதம் ஒன்றை அளித்தார்.
இந்த புகாரின் பெயரில் உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பழனி தெரிவித்ததாவது: கடந்த 2004ஆம் ஆண்டு இந்த கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் 10 ஏக்கர் 21 சென்ட் இடத்தை சாலை வசதிக்காக படப்பை ஊராட்சிக்கு தானமாக வழங்கினோம்.
அரசுக்கு சொந்தமான இந்த இடத்தை பெருமாள்சாமி என்பவர் தனது பெயருக்கு போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றி உள்ளார் என்றும் அதன் விலை 100 கோடிக்கும் மேலாக இருக்கும் என்றும் தெரிவித்தார். எனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சாலை விரிவாக்க பணிக்காக அரசுக்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து போலி ஆவணங்கள் மூலம் பட்டா பெற்றது தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையிலான விசாரணையில் உண்மை நிலை தெரியவரும் என்றும் ஆக்கிரமிப்பு செய்தது உறுதியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.