கோவில் பணியாளர்களுக்கு ₹1000 மதிப்பிலான மளிகை பொருட்கள் வழங்கிய ராமகிருஷ்ண மடம்!
By : Yendhizhai Krishnan
தஞ்சையில் ராமகிருஷ்ண மடம் சார்பில் கிராம கோவில் பூசாரிகளுக்கு மளிகை பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்கோவில் பூசாரிகள் மற்றும் பூ கட்டி விற்கும் தாய்மார்களுக்கு 1000 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவியது தொடங்கியவுடன் தமிழக அரசு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனால் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றும் கோவில் பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கொரோனா ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த கோவில் பணியாளர்களுக்கு நிவாரண உதவி தொகையை பல்வேறு மாவட்டங்களில் ராமகிருஷ்ணா மடம் அளித்து வருகிறது.
தஞ்சை,நாகை, திருவாரூர்,மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 2500 கிராம கோவில் பூசாரிகள் மற்றும் பூ கட்டி விற்கும் தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் ராமகிருஷ்ணா மடம் சார்பாக வழங்கப்பட்டன. இதேபோல் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மக்கள் விடுபட வேண்டி சிறப்பு பூஜைகள் இன்று காலை 10.30 மணி முதல் 11.30 வரை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு பூஜையின்போது கிராமப்புறங்களில் உள்ள 2000 மேற்பட்ட கோவில்களில் ஒரே நேரத்தில் அபிஷேக ஆராதனை வழிபாடு நடைபெற உள்ளது.
இதற்கு தேவைப்படும் பூஜை பொருள்கள் அடங்கிய தொகுப்பையும் கோவில் பூசாரிகளிடம் வழங்கினார். இந்த நிவாரண உதவியை தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் சார்பாக வழங்கிய பின்னர் அதன் தலைவர் பூசாரிகளிடையே உரையாற்றினார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள கோவில் பணியாளர்கள் மற்றும் பூ வியாபாரிகளுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது கோவில் பணியாளர்கள் இடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.
Source : Dinamani